அரியர்ஸ் குறித்த கேள்வி கேட்ட தாய், தம்பி கொலை..!

அரியர்ஸ் குறித்த கேள்வி   கேட்ட தாய், தம்பி கொலை..!

கோப்பு படம் 

தாய், தம்பியைக் கொலை செய்த மாணவன், தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதற்குள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பத்மா (48). இந்தத் தம்பதியினருக்கு நித்தேஷ் (20), சஞ்சய் (15) என இரண்டு மகன்கள். மூத்த மகன் நித்தேஷ் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இந்தநிலையில் நித்தேஷ், தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த 21-ம் தேதி சென்றார்.

பின்னர் அவர், தன்னுடைய செல்போனையும் பையையும் அங்கேயே வைத்து விட்டு சென்றுவிட்டார். அதைக் கவனித்த நித்தேஷின் பெரியம்மா மகளான மகாலட்சுமி, அந்தப் பையை பார்த்தார். அதற்குள் நித்தேஷின் செல்போன் இருந்தது. அதை ஓப்பன் செய்து பார்த்தபோது, ``அம்மாவையும் தம்பியையும் கொலை செய்து விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என்ற வாய்ஸ் நோட் இருந்தது.

அதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, தன்னுடைய உறவினருக்கு தகவல் தெரிவித்து பத்மாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் பத்மாவும் அவரின் இளைய மகனும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தனர். கதவு வெளிபக்கமாக பூட்டியிருந்தது. நித்தேஷை காணவில்லை. அதனால் அவரைத் தேடினர்.

இதையடுத்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பத்மா மற்றும் சஞ்சய் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நித்தேஷை போலீஸார் தேடினர். அப்போது அவர் கடற்கரையில் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பத்மா, சென்னை அண்ணாசாலையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சஞ்சய், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைது செய்யப்பட்ட நித்தேஷ், வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் சரிவர படிக்காததால் பல பாடங்களில் தோல்வியடைந்திருந்தார்.

அதுதொடர்பாக நித்தேஷுக்கும் அவரின் அம்மா பத்மாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். சம்பவத்தன்று பத்மா, சஞ்சய், நித்தேஷ் ஆகியோர் வீட்டிலிருந்திருக்கிறார்கள். அப்போது அரியர்ஸ் தொடர்பாக பத்மாவுக்கும் அவரின் மகன் நித்தேஷிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த நித்தேஷ், அம்மா பத்மாவை கத்தியால் குத்தியிருக்கிறார். அதை தடுக்க வந்த தம்பி சஞ்சய்யையும் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் இருவரின் சடலங்களையும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்குள் வைத்துவிட்டு வீட்டை வெளிப் பக்கமாக பூட்டிவிட்டு பெரியம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த நித்தேஷ் மனம் மாறி கடற்கரையில் படுத்துறங்கியிருக்கிறார். நித்தேஷை கைது செய்து அவரிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

Tags

Next Story