"போ" என்றார் போயே போச்சு!

போ என்றார் போயே போச்சு!

பெரியவா 

மகாபெரியவாவின் அற்புதங்களை படிக்க படிக்க வியப்பின் உச்சிக்கே சென்று விடுவோம். இப்போதும், அவரது அற்புதம் ஒன்றை காணலாம்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் திருத்தணிமலை மீது, பைரவ சுப்ரமணி ஐயர், பிரசாதக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அக்கடையில் வேலை செய்த தொழிலாளர்களில் அடியேனும் ஒருவன். ஓய்வில்லாமல் வேலை செய்ததால் ஒரு சமயம் உடல் சுகமற்று படுத்து விட்டேன்.

நேரம் ஆக, ஆக ஜுரம் அதிகமாகி விட்டது. இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று முடிவு செய்து, மலையிலிருந்து கீழே வருவதற்குள் தள்ளாடியவாறும், அங்காங்கே அமர்ந்தும், ஓய்வெடுத்து, ஓய்வெடுத்து, மெதுவாக இறங்கி ஒருவழியாகக் கடைசி படியில் வந்து நின்றேன்.

கீழே தெப்பக்குளத்துக் கரையில் ஒரு பல்லக்கு இருந்தது. அப்போது என்னை நோக்கி வந்த ஒருவர், "நீங்கள் மலை மீது இருந்து தானே வருகிறீர்கள்?" என்றார். "ஆம்" என்றேன். "அப்படியென்றால், வாருங்கள்" என்று என்னை அழைத்தவர் பல்லக்கின் அருகே கூட்டிச்சென்றார். சற்றே பல்லக்கின் உள்ளே உற்று நோக்கினேன். அங்கே ஸ்ரீ மகா பெரியவர் சாந்த ரூபமாய் என் இருண்ட கண்களுக்கு காட்சி தந்தருளினார்.

மெய் மறந்து கை கூப்பி வணங்கி நின்றேன். "நீ மலையிலிருந்து தானே வருகிறாய்? கோயில் திறந்திருக்கா?" என்று கேட்டார் ஸ்ரீ மகாபெரியவர். நான் மிக பவ்யமாய் "கோயில் சாத்தியிருக்கு சுவாமி!" என்றேன். "அங்கே ஒரு பிரசாதக் கடை இருக்குமே?' என ஸ்ரீ மகாபெரியவர் கேட்டார். "அதுவும் சாத்தியிருக்கு" என்று நான் சொன்னதும், சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.

பிறகு, " என்னை சுமந்து வந்த இவர்கள் மிகவும் பசியோடு இருக்கிறார்கள். புத்தூர், நகரியில் கூட இவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை. திருத்தணிக்குப்போனால் உங்களுக்கு கண்டிப்பாக ஆகாரம் கிடைக்குமென்று சொன்னேன். இங்கே வந்து தெப்பக் குளக்கரை பக்கமுள்ள ஓட்டல்களிலெல்லாம் ஏறி இறங்கியும் ஆகாரம் ஏதும் கிடைக்கவில்லை" என்று ஸ்ரீ பெரியவா சொன்னதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஜுரத்தோடு தள்ளாடிய நிலையில் இருந்த நான், நம் உடம்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, "மகா பெரியவா உத்தரவு இட்டால், அடியேன் இவர்களுக்கு ஆகாரம் தயாரிக்க முடியும்" என்று சொன்னதும், "இந்த ராத்திரியில் உன்னால் என்ன செய்து விட முடியும்?" என்று ஆச்சரியமாக கேட்டார், ஸ்ரீ மகா பெரியவர்.

"நான் மலை மீது உள்ள பிரசாதக் கடையில் இருப்பவன். இவர்களுக்குப் பசியாற வெண்பொங்கல் செய்து தர முடியும்" என்றேன். ஸ்ரீ பெரியவர் "அப்படின்னா ரொம்ப நல்லதாப்போச்சு. அவர்களை மலைப்பாதை வழியாக மேலே போகச் சொல்லி, நான் படி வழியாக நடந்து வருகிறேன். நீ போய் சீக்கிரம் செய், போ"என்றார்.

அதுவரை நோயினால் அவஸ்தைபட்டிருந்த என்னுடைய ஜுரம் 'போ' என்று ஸ்ரீ பெரியவர் சொன்னதும், எப்படிப் போனதென்றே தெரியாமல் போய்விட்டது. நான், பந்தயத்தில் ஓடும் விளையாட்டு வீரனைப் போல ஓடி, ஒற்றையடிப் பாதை வழியாக மலைக்கு வந்து சேர்ந்தேன். அன்று பிரசாதக் கடை முதலாளி இல்லை. அவரது மனைவியிடம் நான் தகவலைச் சொன்னேன்.

அப்பெண்மணியோ "நீ டாக்டரை பார்க்கத்தானே கீழே இறங்கினாய்? வைத்தியநாதனே உன்னை குணப்படுத்தி, உனக்கு உத்தரவு கொடுக்க, என்னை வந்து கேட்கிறாயே! எல்லோரும் நலமோடு இருப்பதற்காக அல்லவா இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. நீ போய் தாராளமாக ஆகாரம் தயார் செய்!" என்றார்.

உடனே அடுப்பைப் பற்ற வைத்து வெண் பொங்கல் தயாரித்தேன் நான். அதன் பிறகு, அங்கு படுத்திருந்த ஒருவரை எழுப்பி, மர அகப்பை, மந்தார இலைகள், பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள புளிக்காய்ச்சல் இவைகளை எடுத்துக் கொண்டு முருகனின் த்வஸ்தம்பத்தின் அருகே வந்து நின்றேன் நான்.

சில நிமிடங்களில் ஸ்ரீ பெரியவர் மலையிலுள்ள கோயிலை வந்தடைந்தார். எல்லா பிரகாரத்திலும் மின்சார விளக்குகள் ஒளி வீச, வாத்தியங்கள் முழங்க அதிகாரி கிருஷ்ணா ரெட்டியார், கோயில் நிர்வாகி குலசேகர நாயுடு, இன்னும் பல ஊழியர்கள், குருக்கள் அனைவரும் சேர்ந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது ஸ்ரீ மகா பெரியவர் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தார். கைகூப்பி அவரெதிரில் வந்து நின்றேன்.

ஸ்ரீ பெரியவர் "ஆகாரம் தயார் தானே" என்றதும், "தயார் செய்து இங்கேயே கொண்டு வந்திருக்கிறேன்" என்றேன். "சரி, இவர்களுக்குப் பரிமாறி விட்டு வா" என்று உத்திரவிட்டார் ஸ்ரீ மகாபெரியவர், பல்லக்கைத் தூக்கியவர்களை உட்காரச் சொல்லி, எல்லோருக்கும் இலை கொடுத்து வெண் பொங்கலைப் பரிமாறிய நான், "இதெல்லாம் உங்களுக்கென்று தயார் செய்தது. புளிக்காய்ச்சல் இருக்கு. திருப்தியாக சாப்பிடுங்கள். நான் கோயில் சென்று பெரியவாளை தரிசிக்க வேண்டும்"என்றேன். அவர்களும், "நீங்க போங்க நாங்க பார்த்துக் கொள்கிறோம்" என்றதும் நான் கோயில் உள்ளே போனேன்.

அங்கே மூலஸ்தானத்தின் அருகே ஸ்ரீ மகாபெரியவா ஸ்வாமிகள் நின்றிருந்தார். அக்காட்சியைக் கண்ட நான், "யார் தணிகைமலை முருகன்? யார் பரமாசாரியார்?" என்று கண்களைக் கசக்கிக் கசக்கி உற்றுப் பார்த்தேன். தெய்வ குருவாகவும், ஜகத்குருவாகவும் ஸ்ரீ பெரியவர் இருந்த நிலை கண்டு, என் கண்களில் நீர் மல்கிப் பெருக்கெடுத்து ஓடியது.

தரிசனம் முடிந்தது. ஸ்ரீ மகா ஸ்வாமிகள் வெளியே வந்தார். அவரை சேவித்து நின்ற கோயில் சிப்பந்திகள் விலகிச் செல்ல நான் அவரெதிரில் கைகூப்பி நின்றேன். ஸ்ரீ மகாபெரியவர் "அவாளெல்லாம் ரொம்ப சந்தோஷப்படறா. ரொம்ப ருசியாகவும்,வயிறு நிரம்ப சாப்பிடவும் செய்தாயே!

ரொம்ப ரொம்ப சந்தோஷம் அவாளுக்கு. வயிறும் ரொம்பிப் போச்சு" என்று சந்தோஷமாக ஆசிர்வதித்து நிற்கையில், கீழே விழுந்து நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தேன். "நீ தினமும் தூங்கப் போகும்போது 'ராம' நாமாவை சொல்லு" என்று ஆசிர்வதித்தார், ஸ்ரீ பெரியவா. அப்போது நேரம் இரவு மணி ஒன்று.

Tags

Next Story