பவானிசாகர் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

பவானிசாகர் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட சின்னதுரை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பழைய குற்றவாளியான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுகுய்யனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும், இவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும், இதற்காக அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, பவானிசாகர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில், சின்னதுரை மீது பவானிசாகர், கோவை போத்தனூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும், கோபி மதுவிலக்கு காவல் நிலையத்தில் கஞ்சா விற்ற வழக்கும் உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ள பழங்குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். பின்னர், சின்னதுரையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story