தென்காசி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை; அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை; அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

குற்றாலம் பிரதான அருவி

தென்காசி சுற்றுவட்டார பகுதியில், தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடரும் மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை. விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடந்த 17 ஆம் தேதி நெல்லையைச் சார்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிக்க கடந்த ஏழு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அருவி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை புலி அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி அளித்தனர்.

தொடர்ந்து இன்று குற்றாலம் பிரதான அருவி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு மட்டும் இல்லாமல் மற்ற அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென மழைப்பொழிவு அதிகரித்ததை தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் , சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதமான சாரல் மழையும் இதமான கால சூழ்நிலையும் நிலவி வருகிறது.

Next Story