திருநெல்வேலி அப்படின்னாலே அல்வா மட்டும் தானா?

திருநெல்வேலி அப்படின்னாலே அல்வா மட்டும் தானா?
ஏன் வேற எதும் இல்லையான்னு கேட்கிறீர்களா. ஏன் இல்லை திருப்பாகம் தெரியுமா உங்களுக்கு?

திருப்பாகம் செய்ய ஒரு பத்து நிமிடம் போதும்.

தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப்,பால் - 1 கப், குங்குமப்பூ - 2, ஸ்டிரிங் முந்திரி பருப்பு - அரை கப் , சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை- முக்கால் கப், நெய் - அரை கப், பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை , ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை.

ஒரு கப் பாலை காய்ச்சி நன்கு ஆறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பால் வெதுவெதுப்பாக இருக்கும் போதே அதில் குங்குமப்பூவை சேர்த்துக் கொண்டால் சுவை அதன் நிறம் நன்றாக இருக்கும். கடலை மாவை கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆறவைத்த பாலில் கடலை மாவைச் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்து வைத்திருக்கும் கடலை மாவைச் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்.


கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக ஆரம்பிக்கும். அல்வா பதத்துக்கும் கொஞ்சம் முந்திய பதத்துக்கு வரும்போது அதில் சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். நன்கு கரைந்து இளகி, பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் சிறிது நெய் சேர்த்து கிளறி இளக்கமாகும் போது பொடித்து வைத்திருக்கும் முந்திரி பொடியை சேர்க்க வேண்டும்.

சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறுங்கள். பின் அதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, ஆகியவற்றைச் சேர்ந்து கலந்து அல்வா பதத்தில் இருக்கும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் திருப்பாகம் தயார். சாப்பிடுங்க... அல்லாவை மிஞ்சிய சுவையை உணரலாம்.

Tags

Read MoreRead Less
Next Story