இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு

இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
X
இசைஞானி இளையராஜா வரும் ஜனவரி 2025இல் தனது முதல் சிம்ஃபொனி இசைக் கோர்வையை வெளியிட இருக்கிறார்.

இந்த செய்தி இசை ஆர்வலர்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. எப்படி நாம் கேட்கும் தமிழிசையில் கிளாசிக்கல் கலந்த கர்நாடக சங்கீதம் என்று கூறுகிறோமோ அது போல மேற்கத்திய இசையின் கிளாசிக்கல் இசை வடிவம் சிம்ஃபொனி ஆகும்.

சிம்ஃபொனி என்பது நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் சிம்ஃபொனி என்பது இசைஞானிக்கு புதிதன்று. 1993இல் லண்டனைச் சேர்ந்த ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கஸ்ட்ராவுடன் இணைந்து தனது முதல் சிம்ஃபொனி இசைக் கோர்வையை இயற்றினார்.

அந்த இசைக் கோர்வையை முன்நின்று நடத்திய கண்டக்டரான ஜான் ஸ்காட் இளையராஜா இசை எழுதும் பாங்கினை "யுனிக்" தனித்தன்மை வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். சிம்ஃபொனி இசைக் கோர்வையில் மூன்று முதல் நான்கு பகுதிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதை மூவ்மெண்ட்ஸ் என்று கூறுகிறார்கள். அதாவது நகர்வுகள்.

முதல் நகர்வு - வேகமாக ஆரம்பிக்கும், இரண்டாவது நகர்வு - சற்று மெதுவாக இருக்கும், மூன்றாவது நகர்வுக்கு மினுட் என்று பெயர். இறுதியில் சற்று வேகமெடுத்து இசைக்கோர்வை நிறைவு பெறும். சிம்ஃபொனியைச் சிறப்பு செய்யும் விதமாக அங்கம் வகிப்பவை அதன் இசைக்கருவிகள்.

நரம்பிசைக் கருவிகள், பெரும்பகுதி வயலின் மற்றும் அதன் தமக்கைகளான வயோலா, செல்லோ மற்றும் டபுள் பாஸ் ஆகிய கருவிகள் பல உள்ளன. அடுத்து குழலிசைக் கருவிகளான புல்லாங்குழல், அடுத்து மேற்கத்திய இசையின் நாதஸ்வரமான "ட்ரம்பெட்" இதை ப்ராஸ் என்று குறிப்பிடுகிறார்கள். நான்காவது மேள தாளங்களான ட்ரம்ஸ் இருக்கும். இதனுடன் பாடலைப் பாடும் பாடகர் பாடகியரும் உடனிருப்பர்.

சுமார் 30 முதல் 100 இசைக்கலைஞர்கள் இந்த இசைக் கோர்வை உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பர். மேற்கூறிய அனைத்து வாத்தியங்களும் வாத்திய கலைஞர்களும் ஒரு சேர இணைந்து கோர்வையாக இசைப்பதற்கு ஏற்றவாறு மியூசிக்கல் நோட்ஸ் எழுதித் தந்தால் அதை கண்டக்டர் வழி நடத்த இசைப்பார்கள். இளையராஜா 1993ஆம் ஆண்டு இசைத்த முதல் சிம்பொனி வெளியிடப்படவில்லை. அந்த சிம்பொனியை எழுதி முடிக்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.

அடுத்து சிம்பொனி இசையின் கூறுகளைப் பயன்படுத்தி 2005இல் திருவாசகத்தை இசைத்திருந்தார். தற்போது இந்த வருடத்தின் மே மாத இறுதியில் முப்பத்தந்து நாட்களில் தனது இரண்டாவது சிம்ஃபொனி இசைக்கோர்வையை இயற்றியிருப்பதாக அறிவித்தார்.

அந்த இசைக் கோர்வையை வருகிற 2025 வருடம் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடுகிறது மெர்குரி எனும் நிறுவனம். உலகிலேயே அதிகம் இசைக்கப்பட்ட சிம்ஃபொனி பிரபல மேற்கத்திய க்ளாசிகல் இசை மேதை பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபொனி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகச் சிறுக தனது கேட்கும் திறனை இழந்து கொண்டிருந்த பீத்தோவன் தனது ஒன்பதாவது சிம்பொனியை வியன்னாவில் இசைத்துக் காட்டும் போது அவருக்கு முழுமையாக கேட்கும் திறன் பறிபோய் இருந்தது. மக்கள் எழுந்து நின்று கை தட்டியது கூட கேட்காமல் அவர் மக்களுக்கு எதிர்பக்கம் திரும்பி கண்டக்ட் செய்து கொண்டிருந்தார். மக்கள் கை தட்டுவதை அவருக்கு முதல் நிலை வயலின் வாசிப்பவர் எடுத்துக் கூறியதும் தான் தெரிந்து கொண்டார். அந்த சிம்பொனி மூலம் காலம் கடந்தும் பீத்தோவன் பேசப்படுகிறார்.

நமது இசைஞானியும் அதைப் போன்ற ஒரு அழியாத புகழை தனது இசைக்கோர்வை மூலம் பெறுவார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!