தமிழக அரசியல் களத்தில் விஜய் வீசிய அணுகுண்டு..!

தமிழக அரசியல் களத்தில்  விஜய் வீசிய அணுகுண்டு..!
X

மாநாட்டில் பேசிய விஜய் 

தமிழக அரசியல் களத்தில் விஜய் வீசிய அணுகுண்டு, பெரிய அளவிலான அரசியல் மாற்றத்திற்கான அடிப்படையினை உருவாக்கி உள்ளது.

ஒட்டுமொத்த தமிழகமும், தேசிய அரசியல்வாதிகளும் ஒரு நாள் முழுக்க கவனித்த விஷயம் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தான். இந்த மாநாட்டிற்கு யாரும் கணிக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் திரண்டனர். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை குவிந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டு பந்தலில் 54 ஆயிரம் பேர் மட்டுமே அமர சீட் போடப்பட்டு இருந்தது. ஆனால் மாநாட்டிற்கு வெளியிலும், ரோடுகளிலும் பல கி.மீ., துாரம் ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதில் 80 சதவீதம் பேர் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது முதல் ஓட்டு பதிவு செய்த அரசியல் வாக்காளர் முதல் ஓரிரு தேர்தல்களில் வாக்களித்தவர்கள். இதற்கு முன்னர் இவர்கள் எல்லாம் வேறு, வேறு கட்சிகளுக்கு ஒட்டு போட்டவர்கள்.

இம்முறை விஜய் பக்கம் சாய்ந்து விட்டனர். விஜய்க்கு 70 லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்ற கணக்கு உள்ளது. இது ஆண்கள் மட்டுமே. ரசிகைகள் பட்டாளத்தை கணக்கெடுத்தால் திராவிட கட்சிகளின் வாக்காளர்களை மிஞ்சும் பலம் விஜய்க்கு உருவாகி விட்டது என இப்போதே அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

முதல் மாநாடு தான் என கவனித்த அத்தனை பேரும், விஜய் மேடையேறியதும், அவர் பட்டாசு போல் வெடித்த வெடிகளால் அதிர்ந்து போயினர். பேச்சின் கடைசியில் அணுகுண்டையும் வீசி சென்றிருக்கிறார் விஜய். அதாவது இதுவரை புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த ஒரு தலைவரும் எடுக்காதபுது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.

பொதுவாக புதியதாக அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள், தனியாகவே களம் இறங்கி தன் பலத்தை நிரூபிப்பார்கள். அல்லது யாருடனாவது கூட்டு சேருவார்கள். ஆனால் விஜய் அடித்த அடி தமிழக அரசியல் களத்தை புரட்டி போட்டுள்ளது. எங்களுடன் கூட்டு சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என தனது தலைமையினை வலுப்படுத்தியதோடு, கூட்டணிக்கு வாங்க... எனவும் பல கட்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளார்.

சமீபகாலமாக தி.மு.க.,வில் கூட்டணி வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் இரண்டு மாநாடுகளை நடத்தி, மிகப்பெரிய அளவில் தனது செல்வாக்கினை நிரூபித்தது. முதல் மாநாடு வென்ற போது, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட்கள் கேட்டு சண்டையிட்டது. இரண்டாவது மாநாடு தொடங்கும் போது, ஆட்சியில் பங்கு தாருங்கள் என வெளிப்படையாக கேட்டது. இதனையே எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க., பரிதவித்தது. ஒரு வழியாக பலமுறை திரைமறைவு பேச்சு நடத்தி திருமாவளவனை சரிகட்டியது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், எங்கள் கூட்டணிக்கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். தி.மு.க.,விற்கு பலம் இல்லை. அந்த கட்சி கூட்டணி பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறது என சமீபகாலமாக பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சே முதல்வர் ஸ்டாலினை சற்று அசைத்து பார்த்து விட்டது. அவர், தி.மு.க., கூட்டணியில் கருத்து சுதந்திரம் இருப்பதால், கருத்து மோதல் உண்டு. ஆனால் விரிசல் இல்லவேயில்லை. எடப்பாடி என்ன ஜோசியக்காரரா? என பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் விஜய் நடத்திய தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஊழல், மதவாதம், மதசார்பின்மை, பெண்களுக்கு முன்உரிமை என பல விஷயங்கள் பற்றி பேசுவார். திராவிடம் பற்றி கட்டாயம் பேசுவார். குடும்ப அரசியல் பற்றி பேசுவார். பாஜக.,வை தாக்கி பேசுவார் என அத்தனை பேரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே விஜய் இது பற்றி அத்தனையும் பேசினார்.

இதெல்லாம் நாங்கள் எதிர்பார்த்தது தானே... இதற்கு தானா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று நேரலையினை பார்த்த அத்தனை பேரும் கிண்டலடித்துக் கொண்டிருந்த நிலையில், விஜய் பேச்சை முடித்தார். பின்னர் ஓரு நிமிடம்... என்று பேசினர். அடுத்து ஒரு முக்கிய தகவல் என்று பேசினார். மூன்றாவது முறையும் முக்கியமான விஷயம் ஒன்று என்று கூறி, பேச்சை தொடங்கிய விஜய், தமிழக அரசியல் களத்தில் தனது அணுகுண்டை எறிந்தார்.

ஆம். எங்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவோம். எங்களை நம்பி வந்தவங்கள... நல்லா பார்துக்கணும்ல என்று அவர் போட்ட போடு... நேரலை பார்த்த அத்தனை பேரின் மூச்சையும் சிறிது நேரம் நிறுத்தி விட்டது. காரணம் இன்று தமிழக அரசியல் களத்தில் அடிநாதமாக உள்ள பிரச்னையை அவர் கையில் எடுத்துள்ளார். அதாவது தி.மு.க.,வாக இருக்கட்டும்... அ.தி.மு.க.,வாக இருக்கட்டும்... பா.ஜ.க.,வாக இருக்கட்டும் தமிழக தேர்தல் களத்தில் தனித்து நின்று வெற்றி பெறும் திறன் எந்த கட்சிக்கும் இல்லை.

தனியாக மக்களை சந்திக்கும் சக்தி தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்ற பலகீனத்தை இதுவரை எந்த தமிழக அரசியல் தலைவர்களும் தங்களின் பலமாகவும் பயன்படுத்தவில்லை. கூட்டணி கட்சிகளை வைத்து தான் திராவிட கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றன. இதனை நன்கு தெரிந்து கொண்ட விஜய்... இந்த திராவிட கட்சிகளின் ஆணிவேரை பிடுங்கி உள்ளார்.

எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டல்... நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம். அதாவது கூட்டணி ஆட்சி அமைப்போம். எங்களுடன் வாருங்கள். நாங்கள் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று அவர் வீசிய அணுகுண்டு ஒரு முதிர்ந்த, கை தேர்ந்த அரசியல் நிபுணத்துவம் வாய்ந்த பேச்சு. இப்போது விஜய் வீசிய அணுகுண்டால், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., என அத்தனை கட்சிகளையும் அதிர வைத்துள்ளது.

இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினாலும்... எங்களுக்கு எத்தனை எம்.எல்.ஏ., என்று மட்டும் கூட்டணி கட்சிகள் கேட்க மாட்டார்கள். சீட் பகிரும் போது... எத்தனை அமைச்சர்கள்... தருவீர்கள். அதுவும் எந்தெந்த எந்தெந்த துறைகள் தருவீர்கள் என்று தான் பேச்சை தொடங்குவார்கள்.

அந்த அளவு கூட்டணி கட்சிகளின் பலமும் கூடியுள்ளதை மறுக்க முடியாது. அதனை தான் விஜய் வெடிக்க வைத்துள்ளார். இது தமிழக அரசியல் களத்திற்கு மிக, மிக புதியது. இதுவரை யாரும் செய்யாத, இதுவரை யாரும் கையில் எடுக்காத அரசியல் யுக்தியை விஜய் கையில் எடுத்துள்ளார். நி்ச்சயம் இந்த அணுகுண்டு தமிழக அரசியலை புரட்டி போடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்