முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறது?

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறது?
X

வெள்ளம் பாதித்த முடிச்சூர் பகுதி 

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் ஆண்டுதோறும் தண்ணீரில் மிதகின்றன. வீட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் பழுதடைந்து புதிதாக வாங்கும் நிலை உள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அனைத்து இடங்களும் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. வழக்கம்போலவே தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜ புரம் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட இந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.

முடிச்சூர் ஊராட்சி மற்றும் வரதராஜபுரம் பகுதிகள் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ளன. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் சூழ்ந்து தனி தீவாக மாறின. முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து மண்ணிவாக்கம் செல்லும் சாலை மற்றும் மணிமங்கலம் செல்லும் சாலைமுழுவதும் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 2015 -ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பலமுறை முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு அடையார் ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தினர்.

மேலும் அடையாறு ஆற்றுக்கு செல்லும், சிறு சிறு கால்வாய்களும் தூர்வாரப்பட்டு அடையாறு ஆற்றுக்கு செல்லும்படி வழி செய்யப்பட்டது. மேலும் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்து அப்பகுதி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தினர்.


ஆனால் தற்போது பெய்த மழையின்போது இந்த கால்வாயால் எந்தப் பயனும் இல்லாமல் அப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது. எப்போதும் போல் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், சரியான திட்டமிடல் இல்லாதது, தண்ணீர் செல்வதற்கு அகலமான கால்வாய் மற்றும் ஏரிகள் நிரம்பும்போது வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததே இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். வீடுகளில் தண்ணீர் புகுவதால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார்கள், பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. மழைவெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக அடையாறு ஆற்றை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.


மேலும் முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விட வேண்டும். இதேபோல் முடிச்சூர் லட்சுமி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் கட்டன் கால்வாய் அமைத்து அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்ல வழி செய்தால் மட்டுமே இப்பகுதியில் மழைநீர் தேங்காது என்று கூறினர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்