திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது!

திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது!
X
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விண்ணிலிருந்து போர் புரிந்த இடமாக திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்போரூர் கந்தசாமி கோவில் (அல்லது திருப்போரூர் முருகன் கோவில்) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான மற்றும் உயர்வான முருகன் கோவிலாகும். பல்லவர் கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் இந்தக் கோவில் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. "புனிதப் போரின் இடம்" என்று பொருள்படும் 'திருப்போரூர்' என்னும் பெயருக்கேற்ப, போர்க்கடவுளான முருகப்பெருமானின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலின் பண்டைய வரலாறு தொன்மவியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. புராணத்தின் படி, சூரபத்மன் என்ற அசுரனின் கொடுமைகள், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தவே முருகப்பெருமான் அவனுடன் போரிட்டார். இந்த புராணப் போர் திருப்போரூரில் நடந்ததாக நம்பப்படுகிறது. அதன்பின்னரே முருகனின் மற்ற போர்கள் திருச்செந்தூர் (கடல்), திருப்பரங்குன்றம் (நிலம்) ஆகிய தலங்களில் நடந்ததாக ஐதீகம். கோயிலில் உள்ள முருகனின் சிலை அசுரர்களுடன் சண்டையிட்ட பிறகு வியர்வை சிந்தியதாக கருதப்படுகிறது.

திருப்போரூர் திருத்தலத்தில் வள்ளி தெய்வானை உடன் உரையாய் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாய் திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவில் பிரமோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் என்பது முருகப்பெருமானின் அருளைப் பெறவும் ஆன்மிக உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ளவும் பக்தர்களுக்குக் கிடைக்கும் அற்புதமான ஒரு வாய்ப்பு. திருவிழாவின் மகிழ்ச்சியிலும் சிறப்பான அனுபவங்களிலும் திளைக்க பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள்.

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி கொடியேற்ற விழா நடைபெற்றது.

முதல் நாள் வியாழக்கிழமை கொடியேற்றமும், இரவு கிளி வாகனம் உற்சவம். இரண்டாம் நாள் பகல் தொட்டி உற்சவம். இரவு பூத வாகன உற்சவம். மூன்றாம் நாள் புருஷா மிருகம் உபதேச உற்சவம். இரவு வெள்ளி அன்ன வாகனம் உற்சவம். நான்காம் நாள் பகல் ஆட்டு கிடா வாகன உற்சவம். இரவு வெள்ளி மயில்வாகனம் உற்சவம். ஐந்தாம் நாள் உற்சவம் பகல் மங்களகிரி உற்சவம். இரவு தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு.

ஆறாம் நாள் பகல் தொட்டி உற்சவம் .இரவு யானை வாகன உற்சவம். ஏழாம் நாள் திருத்தேரோட்டம் ரத உற்சவமும். மங்களாசன உற்சவம். எட்டாம் நாள் காலை தொட்டி உற்சவம். இரவு குதிரை வாகனம் பதிவேட்டை .ஒன்பதாம் நாள் பகல் விமான உற்சவம் இரவு சிம்ம வாகனம் ஆறுமுகசுவாமி அபிஷேகம் மற்றும் உற்சவம் புறப்பாடு. பத்தாம் நாள் பகல் தொட்டி உற்சவம். நண்பகல் தீர்த்தவாரி. மாலை தெப்பல் உற்சவம் .இரவு குதிரை வாகன மத்தியில் அவரோகணம் மௌன உற்சவம் சண்டேஸ்வரர் உற்சவம்.

பதினோராம் நாள் மாலை கிரிவலம் உற்சவம். இரவு பந்தம் பரி உற்சவம். பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

விழா நாள்களில் அன்றாட பகல் உற்சவம் இரவு உற்சவத்தில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்படுகளை திருக்கோயில் செயல் அலுவலர் குமரவேல் மேலாளர் வெற்றி கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!