சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
X

சிதம்பரம் ஆனி தேர்த்திருவிழா

தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டனர்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பக்தர்கள் வடத்தை பிடித்து இழுக்க நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவவாத்தியங்களை வழங்கி நடனமாடி சென்றனர்.

மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

Tags

Next Story