சாமி சிலையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சாமி சிலையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
X

சாமி சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் 

கோவில் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாமி சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. திறந்த நிலையில் உள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக பொது மக்கள் நிதி திரட்டியதை அடுத்து கட்டுமான பணிகளும் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அங்கு வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பிடாரி அம்மன் கோவில் கட்டப்படும் இடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிஷ்ட குருநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி கோவில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் பிடாரி அம்மன் சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தின் முன்பு அம்மன் சிலையை வைத்து விட்டு திடீரென முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த பண்ருட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர்கள் இது குறித்து அங்கு மனுக்கள் பெறும் முகாமுக்கு வந்திருந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு பிரச்சினைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுமான பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சாமி சிலையுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்