59 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை இயக்கி வைத்த அமைச்சர் பெரியசாமி

59 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை இயக்கி வைத்த அமைச்சர் பெரியசாமி
X

திண்டுக்கல்லில் நடந்த விழாவில் புதிய  பேருந்து சேவையை அமைச்சர் ஐ பெரியசாமி துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 59 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சர் பெரியசாமி இயக்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கள் ஆர்.சச்சிதானந்தம், தேனி தங்க.தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி செந்தில்குமார், வேடசந்துார் ச.காந்திராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமார், ஆண்டிப்பட்டி ஏ.மகாராஜன்,மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் 59 புதிய பேருந்துகள் இயக்கத்தை திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றியது மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்க.

தமிழ்நாடு முதலமைச்சர், செயல்பாடுகளால் தான், கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இந்தியாவிலேயேதலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தமிழக மக்களின் உரிமைக்காக மட்டுமின்றி இந்தியாவிற்கே குரல் கொடுத்து சிறந்த முதல்வராக திகழ்கிறார்.

முத்தமிழறிஞர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் தான் தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அரசுடைமை ஆக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர், போக்குவரத்துத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்து, குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதற்காக 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 59 வழித்தடங்களில், புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

5 நகர்ப்புற பேருந்துகள், 53 புதிய புறநகர் பேருந்துகள், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தில் ஒரு பேருந்து என 59 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மண்டலத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 33 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் சுமார் 400 கோடி பயணங்கள் இருக்கும். பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே ஜிஎஸ்டி செலுத்துவதில் 4வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், அதற்குரிய நிதி ஆதாரங்கள் தமிழகத்திற்கு வந்து சேருவது இல்லை. இருந்தபோதிலும், இருக்கின்ற நிதியை வைத்து மக்களுக்குத் தேவையான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட செயல் படுத்தி வருகிறார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சிந்தித்து மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 1.50 இலட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம், சமுதாய முன்னேற்றத்தை சிந்தித்து, கல்வி தான் அடித்தளம் என்ற வகையில் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் , செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி என்பது அரசுப் பணிக்கு செல்வது மட்டுமின்றி, சமுதாய முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

பள்ளி மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில்6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு, மட்டுமின்றி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், குடிநீர் திட்டங்களுக்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கோட்டை, ஆத்துார், திண்டுக்கல் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவருவதற்காக ரூ.550 கோடி மதிப்பீட்டிலான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம், பழனி பகுதிக்கு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.1000 கோடி, வேடசந்துார் பகுதிக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வகுப்பறைகள் அனைத்தும் காற்றோட்டமான வசதியுடன், வண்ண கருத்துப்படங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஆர்வத்தை துாண்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு பள்ளி கட்டடங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 9000 கி.மீட்டர் நீளம் சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதியுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் மேலும் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆக கடந்த 3 ஆண்டுகளில் 20,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அரசின் திட்டங்களை அனைவரையும் சென்றடைய தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாஸ்கரன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ச.ராஜப்பா, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை மண்டல மேலாண்மை இயக்குநர் இரா.சிங்காரவேலு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜ.கார்த்திக், பிலால் உசேன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் கோட்ட பொது மேலாளர் அ.சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!