திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார்: ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தாக்கு

திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார்: ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தாக்கு
X

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

திமுக அரசுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார் என்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கூறினார்.

திமுக அரசுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார் என்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கூறினார்.

ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:-

கடந்த கால ஆட்சியாளர்கள், அதாவது, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களால், இந்த வெற்றிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் திமுக அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறார்களே, சொன்னபடி நிறைவேற்றுகிறார்களே, அதனால் அவர்களுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவும் கிடைக்குதே என்று வயிற்றெரிச்சல் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால், தி.மு.க. ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல், எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

அண்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழைபொழிவு இருந்தது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து எதிர்கொண்டோம். பல லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். மழை தொடங்கியவுடன் துணை முதலமைச்சரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் களத்திற்கு அனுப்பினேன். மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து நானே தொலைபேசியில் பேசினேன். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு அடிக்கடி சென்று, அரசு செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

அதுமட்டுமல்ல அதிக அளவில் பாதிப்புக்குள்ளான, விழுப்புரம் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகளை செய்தேன். இரவு பகல் பார்க்காமல், அரசு இயந்திரம் பணி செய்த காரணத்தினால், ஓரிரு நாட்களில் பாதிப்புகளில் இருந்து மக்களை நாங்கள் மீட்டோம். அதோடு, மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் துரிதமாக செய்து, நாங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறோம். நிவாரண தொகைகளை வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

மத்திய அரசின் நிதி கூட வருகிறதா, வரவில்லையா என்பது பற்றியெல்லாம் காத்திருக்காமல், கவலைப்படாமல், மாநில அரசே உடனடியாக இது எல்லாவற்றையும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.சொல்கிறார்!

முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டார்கள் என்று ஒரு பொய்யை பரப்பினார். ஆனால், உண்மை என்ன? ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரைகளிலுள்ள கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால்தான், பெரிய அளவில் உயிரிழப்புகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். இதுதான் உண்மை!

ஆனால், ஒன்றை மறந்துவிடக் கூடாது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிலைமை என்ன? செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்ட காரணத்தினால், 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள்! முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீரென்று ஏரியை திறந்து விட்ட காரணத்தினால், சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது… அப்போது இருந்த அமைச்சர்கள் யாரும் களத்திற்கு போகவில்லை! தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள்! அதெல்லாம் மறக்க முடியாது. இல்லை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா?

புயல், வெள்ளம், பூகம்பம் இதெல்லாம் இயற்கை சீற்றம்! ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்தது, Man-Made Disaster! மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு! இதை நான் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார்கள்! அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள்! இதையெல்லாம் மறைத்து, சாத்தனூர் அணையை வைத்து பழனிசாமி இன்றைக்கு பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பொய்யையும் சட்டமன்றத்தில் விரிவாக நாங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம்.

அதனால், உடனே அடுத்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை எடுத்துக்கொண்டார். நம்முடைய அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பே, சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அந்த தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார்? ஏலம் விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல், நம்முடைய அரசை குறை சொல்லி பேசினார்.

அதற்குரிய பதில்களையெல்லாம், அமைச்சர்கள் தெளிவாக பதில் சொன்னார்கள்! அதை கேட்காமல் சொன்னதையே, திரும்ப திரும்ப சொன்னார். இந்த வாழைப்பழம் காமெடி தெரியும் அல்லவா, இந்த செந்தில்- கவுண்டமணி காமெடி. அது போன்று சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். நான் அப்போது உறுதியோடு எழுந்துநின்று சொன்னேன். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன்-என்று தெளிவாக சொன்னேன். அதையும் கேட்கவில்லை!

சட்டமன்றம் முடிந்த பிறகு பார்த்தால், டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு காரணமான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததே அ.தி.மு.க.தான் என்ற செய்தியை நாங்கள் வெளியே வந்த பிறகு கேள்விப்பட்டோம். உடனே அதையும் மழுப்ப தொடங்கினார். அதற்கடுத்து மற்றொன்று சொன்னார்… அரசை விமர்சனம் செய்து, அவர் சத்தம் போட்டு கத்தி பேசினார். வாழ் கிழியப் பேசினார். அவற்றையெல்லாம் ஒளிபரப்பாகி இருந்தால், ஆட்சியே கலைந்திருக்குமாம். என்ன ஒரு காமெடி இது! நான் அவருக்கு அன்போடு, பொறுமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

பழனிசாமி அவர்களே… காலி குடம் உருண்டால், சத்தம் அதிகமாத்தான் வரும். அதேபோல் நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும், அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லைக் குத்தி, பொங்கல் வைக்க முடியாது. 4 வருடம் ஆட்சியிலிருந்து உங்கள் பதவி சுகத்திற்காக, சுயலாபத்திற்காக, பலருக்கு துரோகம் செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்தது உங்கள் கட்சிதான் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்போதும்கூட, நீங்களும் சரி, மாநிலங்களவையில் இருக்கும் உங்கள் எம்.பி.க்களும் சரி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசைப் பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியமில்லாமல் தானே இருக்கிறீர்கள். நான் கேட்க விரும்புவது, எங்களைப் பார்த்து கத்தி பேசும் நீங்கள், ஒன்றிய அரசை பார்த்து கீச்சுக் குரலில் பேசக்கூட துணிச்சல் இல்லையா? உங்களுக்கு. என்ன, எதற்கு பயம்? காரணம் என்ன? உங்கள் மடியில் கனம். இந்த இலட்சணத்தில் இருக்கிறது எதிர்க்கட்சி! இப்படி தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்கள் – நாள்தோறும் திட்டமிட்டு பரப்பும் அவதூறுகள் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு என்று எல்லா தடைகளையும் கடந்து தான், நாள்தோறும் நம்முடைய அரசு செயல்படுகிறது!

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும், நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு, தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கிறீர்கள்! அதிலும் குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு மண்டலத்து மக்கள் கொடுத்த வெற்றி என்பது மகத்தான வெற்றி! வெற்றிகளை வாரி வாரி வழங்கும் உங்களுக்கு, திட்டங்களை வாரி வாரி நாங்கள் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

என்னை பொறுத்தவரையில், மக்களாகிய நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு, நான் என்றும் உண்மையாக இருப்பேன்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி என்றைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை தான் வழங்கும்! எங்களின் நல்லாட்சிக்கு, உங்களின் நல்லாசி எப்போதும் வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!