மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு

மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
X
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

மதுரை.மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் உறங்கான்பட்டி கிராமத்தில் , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தொகுப்பின் மூலம் கொய்யா எல்-49, எலுமிச்சை பிகேஎம் 1 ரக மரக்கன்றுகள் நடப்படப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு, வேலைவாய்ப்பு அளித்தல், தொழில்துறை முன்னேற்றம், பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு என பல்வேறு இனங்களிலும் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 70% மக்களுக்கு வேளாண்மை தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வேளாண்மையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறு மாற்றமும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வேளாண் தொழிலை மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்பம், மழையளவு மண்வளம் ஆகியவற்றிற்கு ஏற்ப பயிர் ரகங்களும் உற்பத்தியைப்பெருக்கிட நவீன தொழில்நுட்பங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. உழவுத் தொழிலை தொடர்ந்து மேற்கொள்வோரை, ஊக்குவிக்கும் விதமாக பல உன்னத திட்டங்கள் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய மின்னணு முறைகளும் வேளாண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் ஏழுஅம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான ”மகசூல்பெருக்கம் – மகிழும்விவசாயி” என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் கிராம அளவில் தன்னிறைவு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல் மின் இணைப்பு மற்றும் சூரியசக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பான உலர்களங்கள், சேமிப்புக்கிடங்குகள் அமைத்தல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல் போன்ற அனைத்து துறை திட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டு கிராமத்தின் ஒட்டுமொத்த தன்னிறைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் 58 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23-ஆம் ஆண்டில் 112 கிராம பஞ்சாயத்துகளிலும் என கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 170 கிராம பஞ்சாயத்துகளில் ரூ. 142.301 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மைதுறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 78, 033 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 2021-2022-ஆம் ஆண்டு வேளாண்மை துறையின் மூலம் 13 வட்டாரம் 19 பகுதியில் 252 விவசாயிகளைக் கொண்ட 20 நிலத்தொகுப்பு உருவாக்கப்பட்டு வேளாண் பொறியியல்துறை மூலம் ஆழ்துளைகிணறு அமைத்து இலவச மின் இணைப்பு மற்றும் 1 சோலார் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டக்கலைதுறை சார்பாக கொய்யா, எலுமிச்சை, மா, முருங்கை, நாவல்ரக மரக்கன்றுகள்நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

2022-2023-ஆம் ஆண்டு வேளாண்மைதுறையின் மூலம் 10 வட்டாரத்தில் 18 கிராமத்தில் 26 நிலதொகுப்பு உருவாக்கப்பட்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து இலவச மின் இணைப்பு 6 தொகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 2023-2024-ஆம் ஆண்டில் 85 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு 5 நிலதொகுப்புகள் கண்டறியப்பட்டு, தேர்வு செய்யப்பட்டு கிராமங்களில் தன்னிறைவு அடைந்திடும் வகையில் அனைத்துதுறை திட்டங்களும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் 85 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு 4 நிலதொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டு கிராமங்களில் தன்னிறைவு அடைந்திடும் வகையில் அனைத்துதுறை திட்டங்களும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்