அனுமன் ஜெயந்தி விழா: ஆஞ்சநேயர் கோயிலில் 500 போலீசார் பாதுகாப்பு!

அனுமன் ஜெயந்தி விழா: ஆஞ்சநேயர் கோயிலில் 500 போலீசார் பாதுகாப்பு!
X
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், இன்று ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் : நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், இன்று ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்.

1 லட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை

மார்கழி மாத அமாவாசை தினத்தன்று, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், இன்று(30ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

70 ஆயிரம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு

சுவாமியை தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் இன்று நாமக்கல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில் அமைந்துள்ள 4 வீதிகளை சுற்றிலும், காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் 47 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை ஒருங்கிணைக்க கோயில் அருகில் உள்ள முல்லைமகாலில் காவல்துறை சார்பில் மினி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள்

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில், கோயில் வளாகம் மற்றும் 4 வீதிகளிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய 2 தர்ம தரிசன வாயில்களும், ₹250 கட்டணம் செலுத்தி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஒரு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, பூங்கா ரோடு மற்றும் பொய்யேரிகரை சாலையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெளியே அன்னதானம்

இந்த ஆண்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் அன்னதானம் வழங்க பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

500 போலீசார் பாதுகாப்பு

நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்ஐகள் உள்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கலெக்டர் உமா ஆய்வு

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, நேற்று மாவட்ட கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்து விட்டு, வெளியே செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

போக்குவரத்து மாற்றம்

இந்த ஆய்வின் போது, ஏடிஎஸ்பி செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர் பார்த்தீபன், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, கோயில் உதவி ஆணையர் இளையராஜா, மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஜெயந்தி விழாவையொட்டி, நேற்றிரவு முதல் கோட்டை ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

Tags

Next Story