முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவு: கோழிப்பண்ணையாளர்கள் கவலை

முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவு: கோழிப்பண்ணையாளர்கள் கவலை

பைல் படம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். வியாபாரிகளும் இந்த விலையை கடைபிடிக்க வேண்டும் என்று என்இசிசி வலியுறுத்தி வருகிறது. கடந்த, 1ம் தேதி, முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 8ம் தேதி ரூ. 5.20 ஆக உயர்ந்தது. 18 நாட்கள் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 30 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.90 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்களை கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

வழக்கமாக, ஆடி மாதம், முட்டை நுகர்வு சரியும். அதேபோல், கடந்த இரண்டு வாரமாக முட்டை நுகர்வு சரிந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிராவன் மாதம் துவங்கியுள்ளதால் அங்கும் முட்டை விற்பனை குறைந்துள்ளது. மேலும், ஹைதராபாத் மண்டலத்தில், இரண்டு முறை கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், நாமக்கல் மண்டலத்தில் குறைக்கவில்லை. இதற்கிடையில், முட்டை வியாபாரிகள் என்இசிசி அறிவித்த விலையில் இருந்து 50 பைசா விலை குறைத்து பண்ணைகளில் கொள்முதல் செய்தனர். இந்த சூழலை கருத்தில் கொண்டு முட்டை விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்துக்கு, இந்த விலை சரிவு இருக்கும். பின்னர் நிலமை சீராகும். என்இசிசி விலையில் இருந்து மேலும், குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்தால், என்இசிசி விலையை மேலும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறிõனர்.

Tags

Next Story