கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 8.40 கோடி மானியம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கார்பண்டை ஆக்சைடு கேஸ் சிலிண்டரில் அடைக்கும் பிரிவை, அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 8.40 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக, சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், விவசாயிகள், ஆலை தலைமை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., சர்க்கரைத் துறை இயக்குநர் அன்பழகன், கலெக்டர் உமா, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக்கூட்ட முடிவில் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, நாமக்கல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என மாற்றித்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சர்க்கரை ஆலையில் பயோ கேஸ் தயாரிப்புகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டில் 10,480 விவசாயிகளுக்கு ரூ. 8.40 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் அதிக மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு ரகங்கள் சாகுபடிக்காக 2,379 விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.68 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த நீரைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி மேற்கொள்ள 2023 - 24 ஆம் ஆண்டு 1,432 எக்டர் பரப்பளவில் புதிதாக நுண்ணீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு 1,335 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2023-24 அரவை பருவத்தில் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் தமிழ்நாடு அரசால் டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.3135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசால் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விலை வழங்குவதற்கும், சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் ஆலையின் பராமரிப்பு பணிகளை மேறகொள்வதற்காகவும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.694.37 கோடி வழிவகை கடனாக தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.775 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டர் எரிபொருள் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. அலுவலர்கள் அரசின் திட்டங்கள் விவசாயிகளை முழுமையாக சென்றடையும் வகையிலும், விவசாயிகள் அதிகளில் கரும்பு உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலும் பணியாற்றிட வேண்டும். விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து கனிவாக எடுத்துரைக்க வேண்டும். சர்க்கரை ஆலை ஒரு கூட்டுறவு நிறுவனம். இது விவசாயிகளின் சொத்து என்பதை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துரைத்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
முன்னதாக, இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கார்பண்டை ஆக்சைடு (கோ2) கேஸ் சிலிண்டரில் அடைக்கும் மையத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மோகனூர் அட்மா குழுத்தலைவர் நவலடி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் பாலமுருகன், ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu