தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்..! கலெக்டர் தகவல்..!

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்..! கலெக்டர் தகவல்..!
X

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

சிவகங்கையில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் மாவட்ட தொழிலாளர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை:

காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் கூறினார்.

சென்னை, தொழிலாளர் ஆணையர் , ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர், ஆலோசனையின்பேரில், சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்களின் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் முத்திரை ஆய்வாளர் ஆகியோர், காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைத்திருக்கிறார்களா என்று சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டாய்வில்,தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில், தங்களது நிறுவனத்தின் பெயர் பலகை தமிழில் இருத்தல் வேண்டும் எனவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:1 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறாக பெயர் பலகை தமிழில் இல்லையெனில் ரூ.2,000/- அபராதமும் விதிக்கப்படும் எனவும் தொழிலாளர்கள் நலத்துறையின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வணிகர்கள் தங்கள் நிறுவனத்தில் பெயர் பலகை தமிழில் வைத்து, கடைகள் மற்றும் நிறுவனச் சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுதல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!