உயிரி சார்ந்த உணவு உற்பத்திக்கு விவசாயிகள் மாறவேண்டும்..!

உயிரி சார்ந்த உணவு உற்பத்திக்கு விவசாயிகள் மாறவேண்டும்..!
X

விவசாயி ஒருவருக்கு விசைத்தெளிப்பான் வழங்கிய மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி.

உயிரி சார்ந்த உணவு உற்பத்திக்கு விவசாயிகள் மாறினால் மட்டுமே நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிக்கமுடியும் என்று உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் கேட்டுக்கொண்டார்.

உணவு உற்பத்திக்கான சவாலை எதிர்கொள்ளும் திறமையான, சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு நட்பார்ந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பலன் அடையவேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா கூறியுள்ளார்.

மதுக்கூர் வட்டாரம், கீழக்குறிச்சி கிராமத்தில் அய்யனார் கோவிலில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ஆறு வகுப்புகள் நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. பயிற்சி இறுதி நாளில் தஞ்சை மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா கலந்துகொண்டு நெல் வயல் வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு தீமை செய்யும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக நன்மை செய்யும் நுண்ணுயிர்களை பயன்படுத்துவது மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த நன்மை செய்யும் பூச்சிகளை பயன்படுத்துவது பற்றியும் விளக்கி கூறினார்.


சமீப காலங்களில் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் சீர்கேடு பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இயற்கையான முறையில் வயலின் நன்மை தீமை செய்யும் பூச்சிகள், நன்மை தீமை செய்யும் நுண்ணுயிர்கள் மண் காற்று நீர் மற்றும் களைகளுக்கு இடையேயான இயற்கை கட்டமைப்பை கெடுக்காமல் உணவுச் சங்கிலி அறுந்து விடாமல் உற்பத்தி செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

நெல் பயிருக்கு மட்டுமின்றி அனைத்து உணவுப் பயிர்களுக்கும் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதில் சூடோமோனஸ் எதிர் உயிரியின் பங்கு மற்றும் உளுந்து, கடலை பயிர்களில் டிவிரிடி எவ்வாறு வாடல் நோய்களை கட்டுப்படுத்துகிறது என்பது பற்றியும் எடுத்துக் கூறினார். தீமை செய்யும் பூச்சிகளை இயல்பாகவே நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு சிலந்தி ஊசி தட்டான் மற்றும் குளவிகள் எவ்வாறு பயிர் சூழலின் பல்வேறு கட்டங்களில் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது? மருந்து அடிப்பதால் எவ்வாறு நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும் நுண்ணுயிர்களான மெட்டாரைசியம் மற்றும் பெவேரியா தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுவதை விளக்கிக் கூறினார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பொறிவண்டுகளை மாவு பூச்சி பாதித்த தாவரங்களின் மீது இட்டு எவ்வாறு வளர்க்கலாம் என்பது பற்றியும் சிலந்தி முட்டையிட்டுள்ள இலைகளை பல்வேறு கலன்களில் வைத்து வளர்த்து ஏக்கருக்கு ஆயிரம் எண்கள் வீதம் விடுவித்து பயிர் சூழலைக் காப்பது பற்றி எடுத்து கூறினார்.

மேலும் விவசாயிகள் தாங்களாகவே பயிரின் வேர் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம் தயாரிக்கும் முறைகள் பற்றி எளிதாக விளக்கி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேஷ் சி சி அலுவலர்கள் ரம்யா மற்றும் வைஷ்ணவி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு மற்றும் குறிப்பேடுகளை வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.


நெல் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் நுண்ணூட்டம் சூடோமோனஸ் மற்றும் திரவ உயிர் உரங்களை விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் புனிதா மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் வழங்கினர். மேலும் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானிய முறையில் 16 லிட்டர் விசைத்தெளிப்பான்கள் ஐந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

முன்னோடி விவசாயிகள் மணிகண்டன் மங்கல்தாஸ் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிர் காப்பீடு திட்ட அலுவலர் மணிகண்டன் சம்பா பயிர் காப்பீடு அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!