வரலாற்றுச் சின்னம் நாமக்கல் கோட்டை பற்றி தெரியுமா?

வரலாற்றுச் சின்னம் நாமக்கல்  கோட்டை பற்றி தெரியுமா?
X
நம் கலாசாரத்தை போற்றும் வகையில் அரசர்களும் நம் முன்னோர்களும் பல நினைவுகளை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவை நம் நாட்டின் பொக்கிஷங்கள் என்று சொன்னால் மிகையல்ல. என்னதான் நாம் நவீன காலத்தில் இருந்தாலும் அக்காலத்தில் எழுப்பிய ஒரு கோட்டை போல் இப்பொழுது நம்மால் எழுப்ப முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது.

சிறப்புமிக்க கோட்டைகள் நம் வரலாற்று நினைவுகளாய் நம் கலாசாரத்தின் சின்னங்களாய் இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு கோட்டைதான் நாமக்கல் கோட்டை. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரின் மையப் பகுதியில் நாமகிரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. இந்தக் கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையைச் சென்றடைய முடியும். இந்தக் கோட்டையில் நகரின் பிரபல சுற்றுலாத் தலங்களாக ஒரு கோயிலும், மசூதியும் உள்ளன.

இக்கோட்டை 16ம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இதைக் கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது. திப்புசுல்தான் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார்.

கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், ஆஞ்சனேயர் கோயில் ஆகியவை புகழ் பெற்றவை. மிகப்பெரிய ஒற்றைப் பாறையாக உள்ள மலையின் உச்சியில் கோட்டை உள்ளது. இங்குள்ள நரசிம்மர் கோயிலும் அரங்கநாதர் கோயிலும் மலையைச் செதுக்கி குடைவரைக்கோயில்களாக அமைக்கப்பட்டவையாகும்.

மலையின் கிழக்குப் பகு தியில் அரங்கநாதர் கோயிலும், மேற்கு பகுதியில் நரசிம்மர் கோயிலும் உள்ளன. இக்கோயில்கள் கி.பி. 784ல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டதாகும். நரசிம்மர் கோயிலுக்கு நேர் எதிரே ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. ஆஞ்சனேயர் கோயிலுக்கு கோபுரம் இல்லை. இந்தக் கோட்டை தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் பாதுகாக்கப்படுகிறது. மலையின் வடகிழக்கில் கமலாலயக்குளம் உள்ளது. கமலாலயக்குளம் அடிவாரத்தில் இருந்தாலும் கோட்டையுடன் தொடர்புடையதாக உள்ளது. கோட்டை அந்த மலையில் இருந்து வெட்டப்பட்ட கற்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!