பொங்கல் கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

பொங்கல் கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்.

பொங்கல் கொண்டாட்டம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் திருநாளை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 8 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் திருநாள் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரை, பூங்கா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமைதியான முறையில் எவ்வித இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக சென்று வருவதற்கு மாவட்டம் முழுவதும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 34 இன்ஸ்பெக்டர்கள், 203 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறு, குளங்கள் மற்றும் கண்மாய் போன்ற நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆகவே காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பின்றி நீர் நிலைகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம். மேலும் அப்பகுதிகளில் அதிகமாக கூட்டம் கூடும் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் சைலன்சரில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய அளவில் மாற்றம் செய்து வைத்துக்கொண்டு பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில், அவர்கள் அச்சப்படும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் செல்லுதல், பைக்கில் சாகசம் செய்தல் உட்பட வாகனச்சட்ட விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று பெற்றோர்கள் 18 வயதுக்கு குறைந்த தங்கள் குழந்தைகளான சிறுவர், சிறுமிகளுக்கு லைசன்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது. அதை மீறி அவர்கள் வாகனம் ஓட்டி, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பின் விளைவுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பாவார்கள்.

பொது இடங்களில் மது அருந்திக் கொண்டு பிரச்சனையில் ஈடுபடுபவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் சீருடை அணியாமல், சாதாரண உடையில் பொதுமக்களில் ஒருவரோடு, ஒருவராக கலந்து ஆங்காங்கே தீவிரமாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள எதிரிகளை கைது செய்யவும் பல்வேறு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் விட்டுக்கொடுத்து சுமூகமான முறையில் நடந்து கொள்ளுமாறும், சின்ன, சின்ன பிரச்சனைகளையும் பெரிதாக்கி ஒருவருக்கொருவர் விரோத போக்கை வளர்த்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடாது, ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொண்டு சட்டப்படி தீர்வு கண்டு கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொண்டு காவல்துறையின் அவசர உதவிக்கு எண். 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண். 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிப்பவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும், தகவல் தெரிவிப்பவர்கள் தங்களது விபரங்கள் கூறத்தேவையில்லை. பிரச்சனை என்று கூறினால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பொங்கல் திருநாளை மகிழச்சியாக கொண்டாடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!