சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
X

திருச்சி நீதிமன்றம் (கோப்பு படம்).

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பக்கம் உள்ள பாச்சூரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் பிரகாஷ். இவர் கடந்த 23-11-2016 அன்று திருச்சி -கரூர் மெயின்ரோட்டில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சிறுகமணி ஒட்டப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பொலிரோ வாகனம் பிரகாஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

இதனை தொடர்ந்து ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய பொலிரோ வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வானத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷுக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!