சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..!

சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..!
X
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் குப்பைகள் கொட்ட வந்த ஊராட்சிமன்ற டிராக்டரை சிறை பிடித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாய், பன்றி உள்ளிட்டவை குப்பைகளை கிளறி சாலையில் திரிவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. குப்பை கொட்டும் டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. கவரைப்பேட்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நாள்தோறும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.

ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டர்களில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளில் முறையாக சுத்திகரிக்கப்படாமல் திறந்தவெளியில் சென்னை-கொல்கத்தா சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலமும் தொடங்கி உள்ள சூழலில் குப்பை, கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளில் இருந்து வீசப்படும் துர்நாற்றம் காரணமாக அருகே உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குப்பை கழிவிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுவாசப் பிரச்சினைகள் ஒருபுறமும் கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் தொந்தரவு ஒரு புறம் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சாலையோரம் கூட்டப்படும் குப்பை கழிவுகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் பன்றிகள் கிளறி சாலையில் கொண்டு வந்து போடுவதாகவும் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் அந்த குப்பை கழிவுகளின் சிக்கி விபத்துக்களை சந்தித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சாலைகளில் கிடக்கும் குப்பை கழிவுகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழும் சமயங்களில் பின்னால் வரும் கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் மீது ஏற்றி உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று அந்தப் பகுதியில் குப்பை கொட்டுவதற்காக கீழ் முதலம்பேடு ஊராட்சி சார்பாக குப்பை ஏற்றி வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறை பிடித்து தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது .தலைவர் தான் குப்பைகளை இங்கே கொட்ட சொன்னார் நீங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று தூய்மை பணியாளர்கள் பதில் அளித்தனர்.

பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வருவதாகவும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முறையான திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளாமல் சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டும் ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டும் தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!