மயிலம் மகாகாளியம்மனுக்கு மஞ்சள் இடித்து திருவிழா

மயிலம் மகாகாளியம்மனுக்கு மஞ்சள் இடித்து திருவிழா
X

மயிலம் மகா காளியம்மன் கோவில் மஞ்சள் இடிப்பு திருவிழா 

திருவிழாவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மஞ்சள் இடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டுக்கான மஞ்சள் இடிப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அக்னி தீர்த்த குளக்கரையில் கரகம் ஜோடிக்கப்பட்டு உடுக்கை அடித்து காளியம்மனை அழைத்து சென்று மல்லாக்காக படுக்க வைத்து மார்பின்மீது உரல் வைத்து அதில் மஞ்சளை கொட்டி மயிலம்குரு மகா சன்னிதானம் குமாரசிவ விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மஞ்சளை இடித்து இடிக்கப்பட்ட மஞ்சளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.

பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று வீடு மற்றும் வியாபார தலங்களில் கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் என்பதால் அந்த கோவில் அருகில் பக்தர்கள் முண்டி மோதிக் கொண்டு அந்த மஞ்சளை எடுத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குமாரசிவ விஸ்வநாதன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்