திண்டிவனத்தில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை அகற்றம், பதட்டம்

திண்டிவனத்தில் கொட்டும் மழையில் விநாயகர் சிலை அகற்றம், பதட்டம்
X

திண்டிவனத்தில் அதிகாலை அகற்றப்பட்ட விநாயகர் சிலை 

அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடத்தில் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வைத்து வணங்கி வந்தனர்.

இந்த சிலை வைத்ததற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற நகராட்சி நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இது சம்பந்தமாக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் விநாயகர் சிலையை அகற்றக்கூடாது என மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நகராட்சி அதிகாரிகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் விநாயகர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து விநாயகர் சிலையை கொட்டும் மழையில் அகற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். சிலையை அகற்றுவதற்கு முன்னதாக பூஜை செய்து சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மீண்டும் அந்த பகுதியில் சிலை வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!