மக்களவை தேர்தல்: விழுப்புரம் தொகுதியில் வெற்றி யாருக்கு?

மக்களவை தேர்தல்: விழுப்புரம் தொகுதியில் வெற்றி யாருக்கு?
X
விழுப்புரம் தொகுதியில் விசிக, அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது

திண்டிவனம் மக்களவை தொகுதி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதியாக உருமாற்றம் பெற்றது.

அதற்கு முன்னர் திண்டிவனம், விழுப்புரம், வானூர், முகையூர், திருநாவலூர், கண்டமங்கலம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதி இருந்தது.

இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் தமிழ்நாடு உழைப்பாளர்கள் கட்சி இரண்டு முறையும், காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 3 முறையும், அதிமுக மற்றும் மதிமுக கட்சிகள் தலா இரண்டு முறையும், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் அவர் திமுக எம்பியாகவே கருதப்படுகிறார்.

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை திண்டிவனம் தொகுதியில் எம்பியாக இருந்துள்ளார். மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் 2 முறை எம்பியாக வெற்றி பெற்று உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 559,585 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகளை பெற்றார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட என்.கணபதி 58,019 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரகலாதா 24,609 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட அன்பின் பொய்யாமொழி 17,891 வாக்குகளையும் பெற்றனர்.

தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பாக்கியராஜ், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் முரளி சங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி, மோடி எதிர்ப்பு உள்ளிட்டவை அவருக்கும் சாதகம் என்றாலும் உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு பானை சின்னத்திற்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக அரசின் மீதான அதிருப்தி அதிமுக வேட்பாளர் பாக்கியராஜுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவாக உள்ள பாமகவின் கட்டமைப்பு அக்கட்சி வேட்பாளர் முரளி சங்கருக்கு பலம் சேர்க்கலாம். திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்று தேடுவோர், முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைகிறது.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்