தூய்மையாக மாறும் சென்னை..! பிக்பாஸ் ஐடியாவை கையிலெடுத்த மாநகராட்சி..!
பிக்பாஸ் வீட்டில் எப்படி அறை முழுக்க கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறார்களோ அதுபோல, மாநகர் முழுக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி அதிநவீன முறையிலான கண்காணிப்புக்கு திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதன்மூலம் விதிமீறல்கள் செய்யும் அனைவரையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி விட முடியும் எனவும், சாலைகளில் நடக்கும் விதிமுறை மீறல்கள், குற்றங்கள் உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என மாநகராட்சி நம்புகிறது.
குப்பை கொட்டுவதில் தொடங்கி, வழிப்பறி, செயின் அறுத்தல், திருட்டு, கொள்ளை என அனைத்தையும் இதன்மூலம் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஏஐ கண்காணிப்பு கருவிகள் மூலம் சாத்தியப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை சிங்காரச்சென்னையாக சுத்தம் நிறைந்த இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் அதிக மெனக்கெடலை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னையின் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி ஏஐ கேமராக்களைப் பொருத்தும் முடிவுக்கு வந்திருக்கிறது மாநகராட்சி.
விதிமுறைகளை மீறி குப்பை கொட்டுபவர்கள்,எரிப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து உடனுக்குடன் ஸ்பாட் ஃபைன் போடவும் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் மீறும்போது நடவடிக்கை எடுக்கும் முறையை இப்போது இதற்கும் கொண்டு வந்துள்ளது. இதற்காக IOBயிலிருந்து 468 PoS சாதனங்களையும் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கிறது. இதனைச் செயல்படுத்திய சில நாட்களிலேயே 289 பரிவர்த்தனைகளை முடித்துள்ளது. இதுவரை 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் குடியிருப்புவாசிகளுக்கு அந்தந்த இடத்திலேயே ஸ்பாட் ஃபைன் போடும் முறையை கொண்டு வந்துள்ளனர். பெருநகர செனனை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் குப்பைகளைக் கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம், கால்நடைகளை சாலையில் விடுவது என பல விதிமுறை மீறல்களுக்கு ஸ்பாட் ஃபைன் போடப்படும் என கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக PoS கருவிகளைப் பயன்படுத்தி அபராதங்களை வசூலிப்பார்கள். இதுவரை 500 கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதனால் நேரடியாக மாநகராட்சிக்கு வசூலிக்கும் அபராத தொகை சென்றுவிடும். இடையில் யாரும் கோல்மால் செய்து பணத்தை ஆட்டயப்போட முடியாது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட இருக்கின்றன. 15 பறக்கும் படைகள் வாகனங்களில் ரோந்து சென்று கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu