சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?

சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
X

கோப்பு படம் 

உனது கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற பகவத் கீதையின் சாராம்சம் இந்த சம்பவத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.
"சாராவின் தயாள குணம்"- உண்மைச் சம்பவம்

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில், வேலைசெய்யும் ஒரு பணிப்பெண் சாரா. அவளுக்கு இருந்தால் இப்போது ஒரு 25 வயதுக்குள்தான் இருக்கும். அவள் வேலைசெய்த உணவகத்துக்கு ஒரு ஆண் மற்றும் அவரது மனைவி என இருவரும் வந்து அமர்ந்தனர். அவர்களிடம் சாரா மதிய உணவுக்கான மெனுவைக் கொடுத்தாள்.

அவர்கள் மெனுவைப் பார்ப்பதற்கு முன்பு, சாராவை அருகில் அழைத்து, 'எங்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். அதனால் எங்களிடம் பணம் குறைவாகவே உள்ளது. இந்த உணவகத்தில் விலை குறைவாக உள்ள இரண்டு உணவுகளைக் கொடுங்கள்." என்று கொஞ்சம் கெஞ்சலாகச் சொன்னார்கள்.

உணவகத்தின் பணிப்பெண் சாரா அவர்கள் சொன்னதும் சிறிதும் யோசிக்காமல் அந்த இடத்தைவிட்டு அகன்றாள். அவள் அவர்களுக்கு இரண்டு செட் உணவுகளை கிச்சனில் ஆர்டர் செய்தாள். அதாவது ஒன்று அவர்கள் கேட்ட, விலை குறைந்த உணவில் 2 செட், மற்றொன்று சற்று விலை உயர்ந்த உணவு 2 செட் ஆர்டர் செய்தாள். கிச்சனில் தயார் செய்து தந்ததும் அந்த இரண்டு செட் உணவுத் தட்டுகளையும் அந்த இருவரின் முன்னாலும் வைத்தாள்,சாரா.

அவர்கள் சற்று பதற்றத்துடன்,'இந்த 2 செட் உணவுகளும் விலை மலிவானதுதானே என்று சந்தேகத்துடன் கேட்டனர்.

சாரா தயக்கமில்லாமல், 'ஆமாம். அந்த இரண்டு செட் சாப்பாடும் விலை குறைந்ததுதான். நீங்கள் தயக்கமில்லாமல் நிம்மதியாக சாப்பிடுங்கள்" என்றாள், புன்சிரிப்புடன்.


அவர்கள் பசியாக இருந்ததால் விரைவாக சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து அவர்கள் கிளம்பும் முன் பணிப்பெண் சாராவிடம் பில்லைக் கேட்டார்கள். சாரா பில்லிங் பேடில் ஒரு துண்டு காகிதத்துடன் அவர்கள் அமர்ந்து இருந்த மேஜை அருகே வந்தாள்.

அந்த பேடை அவர்கள் முன்னால் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதை பில் என்று எடுத்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

"உங்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எனது கணக்கிலிருந்து உங்கள் பில்லைச் செலுத்திவிட்டேன். இது என்னிடமிருந்து ஒரு நூறு டாலர் பரிசு. இதுவே உங்களுக்காக நான் செய்யமுடிந்த குறைந்தபட்ச உதவி. நீங்கள் இந்த உணவகத்துக்கு வந்ததற்கு நன்றி - சாரா, என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த தம்பதி கண்ணீருடன் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுவிட்டனர்.

ஆனால் பாருங்கள், சாரா ஒன்றும் பெரிய வசதி படைத்தவள் இல்லை. சாராவுக்கு பண நெருக்கடியான சூழ்நிலையிலும் அந்த தம்பதியரின் மதிய உணவுக் கட்டணத்தைச் செலுத்தியதில் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருந்தாள். வீட்டில் பழைய வாஷிங் மெஷினை வைத்து துணி துவைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அதனால் ஒரு ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்குவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக அந்த பணத்தை சேமித்து வைத்திருந்தாள்.

இப்போது அவள் சேமித்து வைத்திருந்த பணத்தில் அந்த தம்பதியரின் உணவுக்கு செலவிட்டுவிட்டாள். அதை சேமிக்க இன்னும் நான்கைந்து மாதங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். ஆனாலும் சாரா அதற்காக கவலைப்படவில்லை. இரண்டு பேருக்கு உணவளித்தது அவளை ஆழ்ந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

இந்த விஷயம் அவளது தோழிக்கு தெரிய வந்ததும், சாருவின் தோழி, 'ஏண்டி உனக்கு அறிவில்லை? நீயே ஒரு வாஷிங் மெஷின் வாங்குவதற்கு பணத்தை சேர்த்து வைத்திருந்த. இப்போ அதையும் ஊருக்கு தானம் பண்ணிட்டு உக்காந்து இருக்கியே.?' என்று சாராவை மிகவும் திட்டினாள்.

ஏனென்றால், சாரா தன் சொந்த தேவைகள் மற்றும் தன் குழந்தையின் தேவைகளுக்கான செலவுகளைக் குறைத்து அந்தப் பணத்தைச் சேமித்திருந்தாள்.

'ஏண்டி மத்தவங்களுக்கு உதவுறதுதான் இப்ப முக்கியமா..? மொதல்ல உனக்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்கிற வேலையைப்பாரு" என்று சத்தம்போட்டாள், சாராவின் தோழி.

'பரவாயில்ல, விடுடி. என்னுடைய தேவையை எப்ப வேணும் என்றாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அவங்களுக்கு சாப்பாட்டுக்கே பணம் இல்லைடி. நான் கொடுத்த ஒரு நூறு டாலர் இன்னும் கொஞ்ச நாளைக்கு அவங்களுக்கு உதவும். அந்த சந்தோஷம் எனக்கு பெருசா தெரியுதுடி.' என்றாள் சாரா.

இதற்கிடையில், சாராவின் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. சாராவின் அம்மா சத்தமாக, "சாரா என்னடி செய்த?" என்றார் எந்த விஷயத்தையும் முழுமையாக சொல்லாமல்.

சாராவுக்கு ஒரு பெரிய பயம் வந்துவிட்டது. அவள் மெதுவான நடுங்கும் குரலில், “நான் ஒண்ணும்செய்யலியேம்மா.என்ன நடந்தது?" என்று அச்சம் கலந்த குரலில் கேட்டாள்.

சாராவின் அம்மா, "சமூக ஊடகங்கள் உன்னையும் நீ செய்ததையும் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்குடி. பலர் உன்னை பாராட்டி எழுதிக்குவிக்கின்றனர். நீ வைரலாகி வருகிறாய்." என்று பதில் அளித்தார் அம்மா.

சாராவின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுச் சென்ற அந்த ஆணும் அவரது மனைவியும் சாராவின் தயாள குணத்தையும், அவள் உணவுக்காக கொடுத்த பில் தொகை மற்றும் அவள் அளித்த பரிசு என எல்லாவற்றையும் பேஸ்புக்கில் வெளியிட்டனர். அதை பலர் பகிர்ந்து கொண்டனர்.

"நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்டி. நீ என் மகளாக பிறந்தது நான் பெற்ற வரம்" என்று அம்மா புகழ்ந்தார். அம்மாவிடம் முழுமையாக பேசி முடிப்பதற்குள்,

சாராவின் பள்ளித் தோழி ஒருவள் அவளை அழைத்து, ' ஏய் சாரா, உனது செய்தி அனைத்து சமூக தளங்களிலும் வைரலாகப் பரவி வருதிடி.' என்று ஏதோ அவளே சாதிச்சதுபோல சாராவிடம் சொன்னாள்.

சாரா உடனே அவளது பேஸ்புக் கணக்கைத் திறந்து பார்ப்பதற்குள், தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான அழைப்புகளைப் பெற்றாள். சாராவின் சிறப்பு நடவடிக்கை பற்றிப் பேச அவர்களை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அடுத்த நாள், சாரா மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் பார்க்கப்படும் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றில் தோன்றினாள். தொகுப்பாளர் அவளுக்கு மிகவும் விலை உயர்ந்த வாஷிங் மெஷின், லேட்டஸ்ட் டிவி மற்றும் பத்தாயிரம் டாலர்களை வழங்கினார்.

இன்னொரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஐயாயிரம் டாலர் ஷாப்பிங் வவுச்சரைப் பெற்றாள். மேலும் சாராவின் சிறந்த மனிதாபிமான குணத்துக்காக பாராட்டுத் தொகை ஒரு லட்சம் ($100,000) டாலருக்கும் அதிகமானதை எட்டியது.

சாரா கொடுத்த நூறு டாலருக்கும் குறைவான விலையிலான இரண்டு உணவுகள் அவளது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்படி நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத சாராவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனோ சாராவின் தோழி திட்டியதை இப்போது நினைத்துப்பார்த்தாள்.

தாராள மனப்பான்மை என்பது தேவையில்லாத ஒன்றை ஒருவருக்குக் கொடுப்பது அல்ல. ஆனால் தேவையானதை சரியான நேரத்தில் ஒருவருக்கு வழங்குவது ஆகும்.

வறுமை நிலையிலும் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியும்தான் உண்மையான மனிதாபிமானம்.

சாரா அவளது கடமையை மட்டுமே செய்தாள். அவள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவளுக்கு பலன் கைமேல் கிடைத்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!