இஸ்ரேலின் புதிய போர்முறை : அதிர்ந்து கிடக்கும் உலகம்..!

இஸ்ரேலின் புதிய போர்முறை :  அதிர்ந்து கிடக்கும் உலகம்..!
X

மாதிரி படம் 

லெபனானில் நடந்த சம்பவம் உலகை அதிர வைத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா?

இப்படியெல்லாம் ஆபத்து உண்டா என்றபடி ஆளாளுக்கு வாயடைத்து நிற்கின்றார்கள். மின்னணு சாதனங்களில் இப்படியும் உண்டா என அதிர்ந்து நிற்கின்றார்கள். நடந்த சம்பவம் அப்படியானது. வரலாற்றிலே புதிய அதிர்ச்சி.

அதாவது ஹெஸ்புல்லா இயக்கம் லெபனானில் இருப்பது. ஈரானின் ஆசியோடு. அது இஸ்ரேலை மிரட்டி அடிக்கடி ஏவுகணைகளை வீசி அடிவாங்கி கிடப்பதும் எல்லோரும் அறிந்தது. புலி பிடிபட்ட இரையினை போட்டு தன் கண்காணிப்பில் விளையாடுவது போல் இஸ்ரேல் ஹெஸ்புல்லாவுடன் விளையாடுகின்றது.

ஹெஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை தூக்குதல், ஹெஸ்புல்லாவின் போர் பிரகடன நாளில் போர் விமானங்களால் தாழப் பறந்து பெரும் ஓசை எழுப்பி அதனிலே கட்டட கண்ணாடிகளை நொறுக்குதல் போன்ற வேலைகளை செய்து வருகிறது. எங்களிடம் ஒரு லட்சம் ஏவுகணைகள் உண்டு என ஹெஸ்புல்லா சொல்லி முடிக்கும் முன் அவர்கள் ஏவுகணை குடோனை தாக்கி புன்னகைத்தது. முக்கியமாக சட்டென வந்து குதித்து ஹெஸ்புல்லாவின் அதி முக்கிய ஆவணங்களை அள்ளிச் செல்லுதல் என அதிக ஆட்டம் காட்டி வருகிறது.

அதன் பொருள் "ஏ ஹெஸ்புல்லாவே நீ முழுக்க என் கண்காணிப்பில் இருக்கின்றாய், நான் எப்போது நினைத்தாலும் உன்னை நொடிக்குள் முடிப்பேன்" என்பது.

இது ஹெஸ்புல்லாவுக்கும் தெரியும். ஆனால் வறட்டு கவுரவம் விடாது என்பதால் போலியாக மோதுவது போல் மோதிகொண்டிருப்பார்கள். அந்நிலையில் இன்னொரு காரியம் நடந்திருக்கின்றது.

அதாவது ஹெஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனம் பேஜர் அல்லது பேஜர் போன்ற வகை, இதன் மூலமே தன் உறுப்பினர்களுக்கு ஹெஸ்புல்லா தகவலை அனுப்பும். அப்படி எல்லா ஹெஸ்புல்லாவினரும் பேஜர் போன்ற சாதனத்தை வைத்திருப்பார்கள். அவர்களின் தரநிலையினை பொறுத்து இது மாறுபடும்.

இஸ்ரேலால் ஒட்டு கேட்க முடியா தொழில்நுட்பம் என ஹெஸ்புல்லா இதை கருதியிருக்கலாம். அப்படியான சாதனம் திடீரென ஒரே நாளில் லெபனான் எங்கும் வெடித்திருக்கின்றது. சுமார் 4000 பேர் காயம் எனும் நிலையில் பனிரெண்டு பேர் பலியாகி உள்ளனர். இதில் லெபனான் எம்பி மகனும் அடக்கம்.

4000ம் பேர் காயம் என்றால் ஒரே நேரத்தில் எத்தனை கருவிகள் வெடித்திருக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்தாலே விபரீதம் புரியும். அதிர்ந்து கிடக்கின்றது ஹெஸ்புல்லா. இதற்கு இஸ்ரேலே காரணம் என ஹெஸ்புல்லா சொல்கின்றது, பொதுவாக எந்த குற்றசாட்டையும் ஏற்பதுமில்லை; மறுப்பதுமில்லை என்பது இஸ்ரேலிய பாணி.

ஆக இதையார் செய்தார்கள் என்பது உலகுக்கு தெரியும் என்றாலும் எப்படிச் செய்தார்கள் என்பதுதான் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. உண்மையிலே மின்னணு சாதனங்களை இப்படி வெடிக்க வைப்பது சாத்தியமா, அப்படியானால் ஒவ்வொருவர் வீட்டு சாதனம், கணிணி எல்லாம் ஒரே நேரத்தில் உலகில் வெடிக்க வைக்க முடியுமா? அப்படி ஒரு தொழில்நுட்பம் உண்டா என ஒரு கோஷ்டி தலை சுற்றிக் கிடக்கின்றது.

அதெல்லாம் சாத்தியமில்லை. ஹெஸ்புல்லா கொள்முதல் செய்த சாதனங்களின் நிறுவனத்திலே மொசாட் ஊடுருவி கருவிகளில் ஏதோ பொருத்தி மொத்தமாய் வெடிக்க வைத்திருக்கலாம் என்பது இன்னொரு கோணத்தில் தகவல் பரவி வருகிறது.

பொதுவாக இம்மாதிரி கருவிகள் ஈரான் ஊடாக லெபனான் போகும், போகும் வழியில் இஸ்ரேல் பலமுறை அழிக்கும். இதனால் ஈரானில் இருந்து உதிரிபாக இறக்குமதி லெபனானில் ஒருங்கிணைப்பு என்பது ஹெஸ்புல்லா கருவிகளை உருவாக்கும் முறை.

பகுதி பகுதியாக வரும் பாகங்களை லெபனானில் ஹெஸ்புல்லா ஒன்று சேர்க்கும். அப்படி ஈரானில் இருந்து வரும் பாகங்களை இஸ்ரேலிய மொசாட் துல்லியமாக மாற்றி விட்டதா என்பதும் இன்னொரு வாதம். எப்படியோ எதிரிகளை அலறவைக்கும் வித்தை எல்லாம் இஸ்ரேலுக்கு சாத்தியம் அதை மீண்டும் லெபனானில் நடத்தி விட்டது.

இது இனி பெரும் மன உளைச்சலை மனோவியல் பாதிப்பை ஹெஸ்புல்லாவுக்கு ஏற்படுத்தும், ஆயுதமோ உயிரோ போனால் விஷயம் அல்ல, ஆனால் மனோரீதியான பாதிப்பு பெரும் வீழ்ச்சியினை கொடுக்கும். இனி ஹெஸ்ல்புல்லாக்கள் வீட்டில் விளக்கு சுவிட்ச் போட கூட அஞ்சுவார்கள். டிவி இயக்க பயப்படுவார்கள். மைக், கேமரா, துப்பாக்கி என எதைக் கண்டாலும் மனம் பதறும்.

இதுதான் மனோரீதியான அடி. அதெல்லாம் இருக்கட்டும், இனி வரும் போர்கள் எப்படி இருக்குமென்றால் இப்படி தான் இருக்கும். இது மின்னணு யுகம். அதனால் அணு ஆயுதம் போன்றவையெல்லாம் கடைசி கட்ட ஆயுதம். துப்பாகி ஏந்திய பெரும் படை, டாங்கிகள், பீரங்கிகள், விமானம் எடுத்து சென்று குண்டுவீசுதல். ஏவுகணை வீசுதல் எல்லாமே இனி இரண்டாம் கட்டம். முதல் கட்டம் ஒவ்வொருவர் கையில் இருக்கும் சாதனம் மூலமே நாட்டை குழப்பி அலற வைத்து வெடிக்க வைப்பது.

முதல் கட்டத்திலே எல்லோரும் இணையம், போன் என ஒரு வலைபின்னலில் இருக்கும் நேரம் இடம் பார்த்து அடித்து விட்டால் போதும் எல்லாம் காலி. கவனியுங்கள், இதே தாக்குதல் வங்கி கணிணிகள், இன்னும் ராணுவ மின்னணு நிலையங்கள், அணுமின் நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், விமான நிலையங்களில் நடத்தப்பட்டால் என்னாகும்?

இப்போதெல்லாம் கார்களில் உள்ள நவீன மின்னணு இணைப்பினை கவனியுங்கள். தானியங்கி எந்திரங்களை கவனியுங்கள். ஆபத்தின் வீரியம் புரியும். எல்லாம் மின்சார மின்னணு இணைப்பு என்றபின் எளிதில் தாக்கலாமா என்றால் வாய்ப்பு உண்டு. இதுதான் இனி எதிர்கால மிரட்டலும் யுத்தமும்.

எப்படியெல்லாம் உலக தாக்குதல் முறை விஞ்ஞான யுகத்தில் மாறுகின்றது என்றால் இப்படித்தான். கலியுக தொடக்கம் இது. கலிமாயையில் இப்படி எல்லாம் சாத்தியம் என என்றோ சொன்னது இந்து மதம். அது கண்முன் நடக்கின்றது. ஹெஸ்புல்லாக்களின் கையில் இருந்த பல ஆயிரம் தொலைதொடர்பு கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்திருக்கின்றது. அதில் லெபனானிய எம்பிக்களுக்கும் ஹெஸ்புல்லாக்களுக்குமான தொடர்பும் தெரிகின்றது.

Tags

Next Story