புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்

புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
X
தங்கள் நாட்டை நோக்கி வரும் ஏவுகணைகளை எதிர்த்து அழிப்பதற்கு, இஸ்ரேல் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல், தன்னைச் சுற்றியுள்ள பல நாடுகளில் இருந்து அடிக்கடி தாக்குதல்களை சந்தித்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்றுள்ள காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவுடன் போரை சந்தித்து வருகிறது. ஈரானும் தாக்குதல் நடத்தியது; அதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து இந்த நாடுகளின் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் தொழில்நுட்ப பயன்பாடுகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாக, அதன், அயர்ன் டோம் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு தாக்குதல் முறை பெரும் பாராட்டுகளை பெற்றவை.

எதிரிகள் அனுப்பும் ஏவுகணைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, அவற்றுக்கான எதிர்ப்பு ஏவுகணைகள் அனுப்பி நடுவானிலேயே அழிப்பது, இஸ்ரேல் ராணுவத்தின் தற்போதைய மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது.

இந்நிலையில், அயர்ன் பீம் எனப்படும் இரும்பு ஒளிக்கற்றை என்றழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. இது லேசர் வாயிலாக எதிரியின் ஏவுகணைகளை அழிப்பதாகும்.

இதை நிறுவுவதற்கு மட்டுமே செலவாகும். இதற்காக, 4,460 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. பயன்பாட்டுக்கு பெரிய அளவில் செலவாகாது.

தற்போதைய அயர்ன் டோம் முறையில், எதிர்ப்பு ஏவுகணைகளை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அனுப்பும் ஒவ்வொரு எதிர்ப்பு ஏவுகணையையும் தயாரிக்க செலவாகிறது. ஆனால், அயர்ன் பீம் முறையில், லேசர்கள் பயன்படுத்தி, எதிரியின் ஏவுகணைகள் அழிக்கப்படும். இதனால், கிட்டத்தட்ட பயன்பாட்டு செலவே இருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த புதிய முறை, மிகவும் நவீனமானதாக இருக்கும். மிகவும் குறைந்த துாரத்தில் இருந்து, பல கி.மீ., துாரத்திலேயே எதிரியின் ஏவுகணைகளை அடையாளம் காண முடியும். இதைத் தவிர, மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தி, எதிரியின் ஏவுகணைகள் அழிக்கப்படும்.

அயர்ன் டோம் வடிவமைத்துள்ள, 'ரபேல்' நிறுவனம், இந்த புதிய முறையையும் வடிவமைத்துள்ளது.

'எல்பிட்' நிறுவனத்துடன் இணைந்து, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில், இந்த புதிய ஏவுகணை தடுப்பு முறை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!