வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்யணும் தெரியுமா..?

வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால்  என்ன செய்யணும் தெரியுமா..?
X

போக்குவரத்து (கோப்பு படம்)

சாலை பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? அவைகளை ஏன் பின்பற்றவேண்டும் போன்றவைகளை அறிவோம் வாங்க

நாம் வாகனத்தில் சாலையில் பயணம் செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சரியாக வாகனங்களை ஓட்டத் தெரியாமல் சாலையில் பயணம் செய்யக் கூடாது. தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற பின்னரே சாலையில் வாகனங்களை ஓட்ட வேண்டு்ம்.

சரியான பயிற்சி இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது அடுத்தவர் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். மேலும் சாலையில் பயணிக்கும் போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் தவறான மற்றும் கவனக்குறைவாக வாகனத்தை சாலையில் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படும்.

சாலையில் நான்கு சக்கர வாகனமோ அல்லது இரு சக்கர வாகனமோ எதுவாக இருந்தாலும் பழுதுகள் இருக்கும் போது வாகனத்தை ஓட்டக் கூடாது. அந்த பழுதுகளை சரிபார்த்து ஓட்டுவதனால் வீண் விபத்துக்களை தவிர்க்க முடியும். சாலை பயணத்தில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

சாலையில் நீங்கள் வாகனத்தை ஓட்க்டி கொண்டு செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய 4 நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1.வாகனத்தை நிறுத்துங்கள்

நீங்கள் ஒரு வாகன விபத்தில் சிக்கியிருந்தால், நீங்கள் முதலில் சம்பவ இடத்தில் உங்களுடைய வாகனத்தை நிறுத்த வேண்டும். ஏனெனில் இது நீங்கள் பின்பற்ற வேண்டிய சட்டபூர்வமான கடமையாகும். சாலையில் பயணிக்கும் போது விபத்து சிறியதாக இருந்தாலும், விபத்து நடந்த இடத்தை விட்டு ஓடிவிடாதீர்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும். மேலும், உங்களால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். சம்பவம் நடந்த இடத்தில் வேறு நபர்களுடன் அல்லது எதிர் ஓட்டுனருடன் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

2. விபத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் கவனிக்கவும்

வாகன விபத்தில் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம், விபத்தில் யாருக்கேனும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் காயம் இருக்கிறதா என்று முதலில் உங்களைப் பரிசோதித்து கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த வாகனத்தில் வந்தவர்களையும் உடலில் காயம் இருக்கிறதா என்று கவனமாகக் கவனிக்கவும். விபத்தில் சிக்கியவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டு இருந்தால் அந்த காயத்தின் அளவை மதிப்பிடுங்கள், உங்களுடைய இந்த செயல் உங்கள் உயிரையும் அவரது உயிரையும் காப்பாற்ற உதவியாக இருக்கும்.


3. மருத்துவ உதவி பெறவும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அவசியமாகும் உங்களால் முடிந்தால் உடனடியாக காயங்களில் ஏற்படும் ரத்த கசிவை நிறுத்த முயற்சி செய்யுங்கள். சிறிய காயங்கள் என்றாலும் கவனிக்க வேண்டும் மனித உடலில் தலை, மூக்கு, மார்பு, கழுத்து, போன்ற இடுப்புக்கு மேலேயுள்ள பாகங்கள் ஆபத்தான பாகங்களாக கருதப்படுகிறது அதான் இங்கே காயங்கள் ஏற்பட்டால் கவனமுடன் முதலுதவி செய்ய வேண்டும், விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்ற உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவும். உங்கள் உடலையும் கவனித்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் நீங்களும் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். உடனடியாக மருத்துவ உதவி பெற இந்தியாவில் 100,102,112,108 போன்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். யாராவது பேச்சு மூச்சி இல்லாமல் இருந்தால் பயப்பட வேண்டாம் உடனடி மருத்துவம் செய்வதால் சில நேரங்களில் அவர் உயிரை காப்பாற்ற முடியும். உங்களது பயத்தாலோ அலட்சியத்தாலோ அவரது உயிர் போவதைவிட அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க செய்து மனிதாபிமானமாக நடந்து கொள்ளுங்கள். ஒருவேளை விபத்தில் சிக்கிய நபர் இறந்து விட்டால் நீங்கள் தேவையில்லாமல் பயந்து தவறாக செயல்பட்டு அதை மறைக்க முயற்சி செய்து நடந்த குற்றத்தை பெரிய குற்றமாக மாற்றி விடாதீர்கள். நடந்தது விபத்து அவரை நீங்கள் கொலை செய்யும் எண்ணத்தில் செயல்படவில்லை யாரோ ஒருவருடைய கவனக் குறைவால் விபத்து நடந்துவிட்டது இனி அதை மறைத்து பலனில்லை தொடர்ந்து நடக்கும் சட்ட நடைமுறையை நேர்மையாக எதிர் கொள்ளுங்கள்.

4. போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்யுங்கள்

நீங்கள் விபத்துக்கு பிறகு சுயநினைவில் இருந்தால் விரைவாக செயல்பட வேண்டும் யாரும் காயம் அடைந்துள்ளனரா என்று பார்த்து உறுதி செய்தவுடன் உதவிக்கு போலிசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். போலிஸ்க்கு தகவல் கொடுப்பதை விபத்தில் சிக்கியவர் தான் தகவலளிக்க வேண்டும் என்றில்லை விபத்தைப் பார்த்த யாரும் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம். சட்ட சிக்கல்களையும் தவிர்க்க, கார் விபத்து குறித்து காவல்துறைக்கு விரைவில் தெரிவிக்கவும்.

காவல்நிலையத்திற்கு தகவல் கொடுப்பதால் காவல்நிலைய அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மேலும் போலிஸ் பதிவு செய்யும் எஃப் ஐ ஆர் இன்சூரன்ஸ் கிளைம் அல்லது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கிளைம் செட்டில்மென்ட் செயல்பாட்டில் உங்களுக்கு தேவைப்படும். போலிஸ் FIR இன்சூரன்ஸ் கிளைம் செயல்பாட்டில் நீங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணமாகும்.

சாலை விபத்தில் காப்பீட்டை பெறுவது எப்படி?

சாலை விபத்தில் உங்கள் வாகனம் சேதமடைந்து இருந்தால் எந்தெந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தால் விரைவில் வாகன காப்பீட்டை பெறமுடியும் அதற்கு நான்கு வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

1.உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நீங்கள் கவனித்துக்கொண்ட பிறகு, உதவிக்கு மருத்துவமனைக்கு மற்றும் போலிசுக்கும் தகவல் கொடுக்க வேண்டும், அதன் பிறகு சாலையில் நடந்த விபத்து குறித்து உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியதும் அவசியமாகும்.

நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கி இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை உடனடியாக அழைத்து நடந்த விபத்தை பற்றி தெரிவிக்கவேண்டும், இதன் மூலம் இன்சூரன்ஸ் கிளைம் விரைவில் பதிவு செய்யப்படும். ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உடனடியாக சொல்ல முடியவில்லை என்றாலும் கவலை வேண்டாம் போலிஸ் அதிகாரிகள் நடந்த விபத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து இருப்பார்கள் அதன் அடிப்படையில் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம்.

2. படங்களை எடுக்கவும்

காப்பீட்டு நிறுவனத்திடம் விபத்து நடந்த ஆதாரங்களை நிரூபிக்க விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட சேதங்களை புகைப்படம் எடுக்கவும். புகைப்படங்கள் தெளிவாகவும் எல்லாப் பக்கங்களிலிருந்து எடுத்திருக்க வேண்டும். விபத்து நடந்த எல்லா கோணங்களிலும் எடுப்பதால் தெளிவாக விபத்து மற்றும் சேதத்தை கண்டறிய முடியும் இன்சூரன்ஸ் கிளைம்க்கு இது உதவியாக இருக்கும். இவை அனைத்தையும் நீங்கள் நலமுடன் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும் ஒருவேளை விபத்தில் பலமான காயம் ஏற்பட்டு விட்டால் இதைப் பற்றி கவலைபடாமல் உடனடியாக மருத்துவ உதவியை பெறுவதே நல்லது, விபத்து பற்றிய விசாரணையை காவல் அதிகாரி செய்த பிறகு பெறுமையாக இந்த தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும், காவல்நிலைய fir யை வைத்தே இன்சூரன்ஸ் பெறலாம்,மேலே குறிப்பிட்ட அனைத்தும் விரைவாக இன்சூரன்ஸ் கிளைம் பெறுவதற்காக மட்டுமே.

3. ஆவணங்களை சமர்ப்பிக்கவும்

விபத்து ஏற்பட்ட பிறகு வாகன காப்பீட்டை பெற சில ஆவணங்கள் தேவைப்படுகிறது அதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். விபத்து ஏற்பட்டால் தேவையான ஆவணங்கள்: ஓட்டுநர் உரிமத்தின் நகல், போலீஸ் எஃப்ஐஆர் நகல், கார் பதிவு சான்றிதழின் நகல் (RC Book), கார் காப்பீட்டு ஆவணங்களின் நகல், வாகனத்தை பழுதுபார்த்த செலவு மதிப்பீடு பீல்கள், மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் வாகன இன்சூரன்ஸ் கிளைம் செட்டில்மென்ட் பெற விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்.

4. உங்கள் வாகனத்தை பழுது பார்க்கவும்.

விபத்துக்குள்ளான வாகனத்தை திரும்பவும் மறு சீரமைத்து பழுது பார்ப்பதற்கு முன் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தகவல் கொடுப்பது நல்லது சில நேரங்களில் வாகனத்தின் சேதத்தை ஆராய்ந்து பார்க்க காப்பீட்டு நிறுவனம் ஒரு சர்வேயரை அனுப்பி வைக்கவும் வாய்ப்புள்ளது. அந்த சர்வேயர் விதத்தில் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடுவார். இதற்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் கேரேஜில் வாகனத்தை அனுப்பி வைத்து நிறுவனமே உங்களுடைய வாகனத்தை பழுதுபார்த்து சரி செய்து தருவதற்கும் வாய்ப்புள்ளது அல்லது நீங்கள் ஏதோ ஒரு மெக்கானிக் கேரேஜில் வாகனத்தை அனுப்பி சரி செய்து அந்த பில் பணத்தை கொடுத்த பிறகு தான் இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்து பெற முடியும்.

மேற்கண்ட அனைத்தையும் விபத்து ஏற்பட்ட பிறகு பின்பற்ற வேண்டியவை ஆகும். இதில் கட்டாயம் என்பது எதுவும் கிடையாது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் உயிரை முதலில் காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். விபத்து நடந்த பிறகு பெரிய காயம் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் மேலே கொடுக்கப்பட்ட 4 செயல்முறையையும் பின்பற்ற வேண்டும். வாகன விபத்தில் இன்சூரன்ஸ் இல்லை என்றால் என்ன ஆகும்?

வாகன விபத்துக்கள் ஏற்படும் போது இழப்புகள் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் உயிரே பறிபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இழப்பு ஏற்பட்டவருக்கு இழப்பீடு வழக்குவதில் அலட்சியமாக இருக்க கூடாது என்பதற்காக தான் அனைத்து வாகனங்களிலும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என இந்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இருந்த போதிலும் நிறைய மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் தங்களது வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பதில்லை. காப்பீடு இல்லாமல் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அதற்கான செலவுகள் மற்றும் இழப்பீடு தொகையை கட்டாயம் நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லாத நிலையில் உங்களுக்கே விபத்து ஏற்பட்டாலும் அந்த இழப்பை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும்.

சாலையில் பயணம் செய்யும் போது எப்போதும் கவனமுடன் செல்வது மட்டும் முக்கியமல்ல. சரியான சாலை விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் எப்போதும் பயணம் செய்யும் போது வாகனத்திற்கான ஆவணங்களையும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும், கட்டாயம் இன்சூரன்ஸ் வாகனத்திற்கு வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விழிப்புணர்வோடு சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!