ஓபிஎஸ்-க்கு டாட்டா.... பாஜகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்பி மைத்ரேயன்

ஓபிஎஸ்-க்கு டாட்டா.... பாஜகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்பி மைத்ரேயன்
X

மைத்ரேயன் (பைல் படம்).

அதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் மைத்ரேயன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

மைத்ரேயன் அரசியல் பயணம்:

மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ராத்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். கடந்த 23 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து அரசியலில் இருந்து பயணித்து வந்தவர் தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் எப்படி?

அதிமுகவில் இருந்தபோது கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அதோடு டெல்லியில் நடைபெறக்கூடிய அதிமுக தொடர்பான நிகழ்வுகளையும் கவனித்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியில் நிலவிய குழப்பங்கள் காரணமாக, சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் பயணம் செய்தார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்த பிறகும் கூட, மைத்ரேயனுக்கு கட்சியில் பெரிய முக்கியத்துவம் எதுவும் அளிக்கப்படவில்லை.

மாறி மாறி தாவிய மைத்ரேயன்:

ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியபோது மைத்ரேயனுக்கு மாநிலங்களவை பதவி தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் தலைமையேற்ற பிறகு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்தபோது, ஒபிஎஸ் அணியில் பயணித்தார். ஆனால், திடீரென ஈபிஎஸ் தரப்புக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அங்கு போதிய முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்:

தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பால் எதிரணிகளை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியை அவர் வகித்து வந்தார். அதைதொடர்ந்து, அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் சில காலங்கள் அமைதி காத்து வந்தார். தொடர்ந்தும், கடந்த ஏப்ரல் மாதமே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் அவர் மீண்டும் தனது தாய்க்கழகமான பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகளை, மைத்ரேயன் பாஜக பக்கம் இழுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!