நாமக்கல் : ரூ.140 கோடி செலவில் போதமலையில் புதிய சாலை - 150 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு!
நாமக்கல்: போதமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் 150 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண 140 கோடி ரூபாய் மதிப்பில் கெடமலை, கீழூர், மேலுார் கிராமங்களை இணைக்க சாலைப்பணி விறுவிறுப்பாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போதமலை - இயற்கை வளம் நிறைந்த பகுதி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், வெண்ணந்துார் அருகே உள்ள போதமலை. இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதியான இங்கு பலா, வாழை, அன்னாசி உள்ளிட்ட கனி வகைகள் மற்றும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது, 20 ஏக்கர் பரப்பளவில் மிளகு, காபி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
போதமலையில் உள்ள கீழூர் பஞ்சாயத்தில், கீழூர், மேலுார், கெடமலை என, மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இதில் கீழூரில் 105 குடும்பங்களை சேர்ந்த 648 பேர், மேலுாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 362 பேர், கெடமலையில் 80 குடும்பங்களை சேர்ந்த 396 பேர் என மொத்தம் 1,406 பேர் வசிக்கின்றனர்.
போதமலையில் சாலை வசதி இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள்
- திடீர் உடல்நிலை பாதிப்பு மற்றும் பிரசவ காலத்தில் 'டோலி' கட்டி சிரமப்பட்டு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை
- விளை பொருட்களை தலைச்சுமையாக கொண்டு செல்லுதல்
- தேர்தல் நேரத்தில் ஓட்டுப்பதிவு பெட்டிகள், உபகரணங்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்லும் சிரமம்
மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
இதனால், போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். கீழூர் முன்னாள் பஞ்., தலைவர்கள் அலமேலுமணி, குப்புசாமி ஆகியோர் கடந்த காலங்களில் சாலை வசதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அதற்காக மனு எழுதி கலெக்டர் முதல் முதல்வர் வரை கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
போதமலை சாலை அமைக்க நீதிமன்ற அனுமதி
இந்நிலையில், போதமலையில் சாலை வசதி ஏற்படுத்தி தர உச்சநீதிமன்ற பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, வடுகம் கிராமத்தில் இருந்து கீழூர் வழியாக மேலுாருக்கும், புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
139.65 கோடி ரூபாய் மதிப்பில் 31 கி.மீ. சாலை
தொடர்ந்து, 2024 பிப்., 18ல், நபார்டு திட்டத்தின் கீழ், கீழூர், மேலுார், கெடமலையை இணைக்கும் வகையில், 139.65 கோடி ரூபாய் மதிப்பில், 31 கி.மீ., நீளத்திற்கு போதமலையில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இச்சாலை, வடுகம் முதல் கீழுர் வழியே மேலுார் வரை 21.17 கி.மீ., தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.9 கி.மீ., தொலைவிற்கும் என மொத்தம் 31 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. தற்போது, புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கு 6 கி.மீ., வடுகத்தில் இருந்து கீழூர், மேலுாருக்கு 3 கி.மீ., துாரத்திற்கு சாலை பணி முடிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டோம் - அலமேலுமணி, குப்புசாமி
போதமலை கீழூர் பஞ்., முன்னாள் தலைவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த அலமேலுமணி: போதமலைக்கு சாலை வசதிக்காக, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது. சாலை அமைப்பதற்கான துாரம், இடம் ஆகியவை அளவீடு செய்யப்பட்டது. அதன்பின் பணி மந்தமாக நடந்து வந்தது. தொடர்ந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமாரிடம், தொடர்ந்து மனு கொடுத்து வந்தோம். தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கீழூர் கிராம பஞ்., முன்னாள் தலைவர் குப்புசாமி: நான் கடந்த, 2011-16ல் பதவியில் இருந்தேன். போதமலையில் உள்ள கீழூர் பஞ்.,ல் கீழூர், மேலுார், கெடமலை குக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. அவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என, நாமக்கல் கலெக்டர் அலுவலகம், ராசிபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை போராட்டம் நடத்தினோம். குறிப்பாக, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து, அப்போதைய ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான தனபால் முயற்சி செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu