மத நல்லிணக்கத்தை வளர்ந்தோங்க செய்வது காலத்தின் கட்டாயம்
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்ற திருப்புகழ் முப்பெரும் விழாவில் முனைவர் மா.க. ரமணன் எழுதிய அகம் புறம் அறம் என்ற நூலினை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் ஜெகதீசன்
மத நல்லிணக்கத்தை வளர்ந்தோங்க செய்வது காலத்தின் கட்டாயம் என்றார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன்
தற்போதைய சூழலில் மத நல்லிணக்கத்தை மென்மேலும் வளர்ந்தோங்கச் செய்வது காலத்தின் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன் தெரிவித்தார்.
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் திருப்புகழ் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூர் தேரடியில் உள்ள சங்கர மடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் கலந்து கொண்டு பாசறையின் செயலாளர் முனைவர் மா.கி. ரமணன் எழுதிய 'அகம் புறம் அறம்' என்ற நூலினை வெளியிட அதனை லயோலா கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அருணை பலராவாயன் பெற்றுக் கொண்டார். மேலும் பேராசிரியர் அருணை பாலறாவாயன் சைவ சித்தாந்த நூல்களை எழுதி பிரசாரம் செய்து வருவதை பாராட்டும் வகையில் அவருக்கு பாரதி பாசறை சார்பில் வழங்கப்பட்ட 'சைவ சித்தாந்த கலாநிதி'என்ற பட்டத்தை முன்னாள் நீதிபதி ஜெகதீசன் வழங்கி கௌரவித்தார்.
அப்போது முன்னாள் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது: திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் பாரதி பாசறை அமைப்பு கடந்த 39 ஆண்டுகளாக ஆன்மீகம், இலக்கிய துறைகளில் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. முனைவர் மா.கி. ரமணன் எழுதிய 'அகம் புறம் அறம்' என்ற புத்தகம் அகத்தையும் புறத்தையும் ஆள்வது அறம்தான் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் அறத்தின் முக்கியத்துவங்களை புத்தகத்தில் பல இடங்களில் கோடிட்டு தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அகத்தின் அழகையும், புறத்தின் திறமையையும் வெளிப்படுத்துகிறது இந்த நூல்.
'முருகன் அருள் பெற்ற முகமதியர்கள்' என்ற புத்தகம் அந்த காலங்களில் மக்களிடையே வேறுபாடு இன்றி அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் வந்ததை எடுத்துரைக்கிறது. ஆனால் தற்போது சமூகத்தில் நிலவும் மத பிணக்குகள் கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் மதம் சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவையாக உள்ளது
.எனவே முன்பிருந்த நிலைக்கு இச்சமுகத்தை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மதங்களையும் சார்ந்த சமூகத்தின்மீது அக்கறை கொண்ட நண்பர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சமூக நல்லிணக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தற்போதைய நிலையில் மதநல்லிணக்கத்தை மென்மேலும் வளர்ந்தோங்க செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் முன்னாள் நீதிபதி ஜெகதீசன்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் பலராவாயன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ச. லட்சுமணன், சிவாலயம் ஜே மோகன் பாசறை நிர்வாகிகள் பு.சீ. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ச. மகாலிங்கம், கு.நீலகண்டன், கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu