இளம்பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு: கண்காணிப்பு தீவிரம்

இளம்பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு: கண்காணிப்பு தீவிரம்
X

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. (மாதிரி படம்)

புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று பாதிப்பு சில மாதங்களாக குறைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது. உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த 26ம் தேதி வரை 69 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை தனிமைப்படுத்தினர். மேலும் அவரது பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியும் மேற்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோரையும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அண்மையில் அவர் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

கோவையில் ஜே.என்.1 வகை கொரோனா ஒருவருக்கு உறுதியானதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்பதுடன், பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையம், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதுதவிர மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 100 வார்டிலும் எந்தெந்த பகுதியில் கொரோனா உள்ளதோ அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து கோவையில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!