நீர் நிலைகளை பாதுகாப்பது நமது கடமை: ஆட்சியர்..!

நீர் நிலைகளை பாதுகாப்பது நமது கடமை: ஆட்சியர்..!
X

கூட்டத்தில் பேசும்  மாவட்ட ஆட்சியர்.

நீர் நிலைகளை பாதுகாப்பது நமது கடமை என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்தும் திட்ட துவக்கவிழாவில் பேசினார்.

காரியாபட்டி.

தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

குளம் என்பது ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக இருந்தது.ஒரு குளத்தை பாதுகாப்பது என்பது அந்த கிராமத்தினுடைய கடமை- மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பரளச்சி கிராமத்தில், தானம் அறக்கட்டளை மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த ஊரகச் சூழலின் மூலம் நிலையான பஞ்சாயத்து கிராமங்களை மேம்படுத்துதல் திட்ட துவக்க விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முன்னேற விளையும் மாவட்டமான நமது விருதுநகர் மாவட்டம் பல்வேறு குறியீடுகளில் இன்னும் நாம் அடைவதற்கும், செல்வதற்குரிய தூரமும் நிறைய இருக்கிறது.திருச்சுழி பகுதியில், பெரும்பாலான இடங்கள் வானம் பார்த்த பூமியாக இருக்கக்கூடிய பகுதிகள். இன்னும் பல இடங்களில் வரலாறு எடுத்து பார்த்தால், இந்த பகுதியில் 12 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் கால ஆட்சிக் காலத்தில் நிறைய குளங்களை வெட்டிய இடங்களை நாம் பார்க்க முடியும். அதற்குப் பின் வந்த நாயக்கர் காலத்தில்,

இந்த பகுதியில் நிறைய விவசாயங்களை செழிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக வடிகால்களை தோற்றுவித்து, நிறைய குளங்களை, ஏரிகளை வெட்டினார்கள்.

இப்பகுதியில், இயல்பாகவே மழைப்பொழிவு குறைவு. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவை விட விருதுநகர் மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைவு. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சராசரி மழைப்பொழிவை விட இந்த பகுதியில் 600 முதல் 700 மில்லி மீட்டர் வரை தான் சராசரி மழைப்பொழிவு இருக்கிறது. எனவே, பெரும்பாலும் விவசாயம் என்பது இங்கே வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது. எனவே, விவசாயத்திலிருந்து வரக்கூடிய வருமானம் என்பது மிக சொற்பமாகவும், குறைவாகவும் இருக்கக்கூடிய சூழல் உள்ளது.

கால்நடை வளர்ப்புக்கும் தொழிலுக்கும் தண்ணீர், மேச்சல் நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே ,இந்த பகுதியில் இயல்பாகவே பொருளாதார குறியீடுகள் என்பது சற்று குறைவு. இது போன்ற கிராம பகுதிகளில் அரசினுடைய திட்டங்களான வறுமை ஒழிப்பு திட்டங்கள் பல்வேறு காலக்கட்டங்களில், செயல்படுத்தி வந்தாலும், பொதுமக்கள் குழுவாக இணைந்து அதன் மூலமாக செயல்படும் போது அதற்கான விளைவுகள் இன்னும் அதிகமாக இருக்கிறது.

மகளிர் சுய உதவி குழுக்களினுடைய வருகைக்கு பிறகு 20 முதல் 30 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தில் அடைந்து இருக்கக்கூடிய, முன்னேற்றங்கள் மிகப் பெரிது.ஒரு பொருளாதார தத்துவத்தில் வறுமையின் நச்சு சுழல் என்று குறிப்பிடுவார்கள். வறுமையை ஒரு காலகட்டத்தில் அதற்கென்று தனியாக சிறப்பாக கவனம் செலுத்தி அதை அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வறுமையில் இருப்பவர் தொடர்ச்சியாக கடன்களை பெறும் போது, அவர் வாழ்நாள் முழுவதும் வட்டியை செலுத்தவும், கடனை அடைப்பதற்கும் செல்கிறது. மொத்த சம்பாத்தியத்தினுடையபெரிய செலவு என்பது முதலில் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். சேமிப்பவர்களால்தான் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து வெளியே வர முடியும்.வரக்கூடிய சம்பளத்தில்மாத மாதம் சேமிக்கும் போது, ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்

கிறார்களோ அதே மாதிரியான பணம் இந்த சேமிப்பின் மூலம் பெறப்படும். சேமிப்பு தான் இது மாதிரியான அடுத்தடுத்த வளர்ச்சியை கொடுக்குமே தவிர, அதற்கு எதிராக இருக்கக்கூடிய செலவு என்பது அந்த நச்சு சுழலில் கொண்டு போய் சேர்த்து விடும்.

கடன் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால், அதற்கான வட்டியும், கடனையும் திருப்பி செலுத்தக்கூடியது நமது கட்டுப்பாட்டை விட்டு மீறுகின்ற போது அது ஒரு தனி மனிதரை அந்த நச்சு சுழலில் சென்று செலுத்தி விடுகிறது. எனவே ,இதை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்இது போன்ற அறக்கட்டளை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அரசுனுடன் இணைந்து குறைந்த வட்டியில் நுண்கடன்கள் வழங்கி,அதை முறையாக செலுத்தி அந்த வறுமையில் இருந்து வெளியில் வருவதற்கு உதவி செய்கின்றனர்.

எனது,இந்த கடனை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய வருமானத்தைப் பெருக்குவதும் மிக முக்கியம். குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிறைய கடனுதவிகள் வழங்கப் படுகின்றன. அதுமட்டுமல்ல, அவர்களுக்கான நிறைய தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சாதாரண கூலி வேலைக்கு சென்றவர்கள் கூட, குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தையல் போன்ற தொழில் செய்வதன் மூலம் அவர்களுடைய வருமானம் கணிசமாக உயர்ந்து இருக்கின்றது. இது போன்று தொழில்கள் செய்வதற்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அதற்கான பயிற்சிகள் வழங்குவதோடு கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.

மேலும், நமது பகுதிகளில் அரசினுடைய திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாகவும் நீர்நிலைகளை மேம்படுத்துவதன் மூலமாக இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக செய்ய முடியும். விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையாக இருக்கக்கூடிய கால்நடை வளர்ப்பும் செய்ய முடியும்.

இந்த பகுதிகளில் குளம் என்பது ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக இருந்தது.ஒரு குளத்தை பாதுகாப்பது என்பது அந்த கிராமத்தினுடைய கடமை. கிராமத்தினுடைய குளத்தை பாதுகாப்பதற்கு என்று அவர்களுக்குள்ளேயே முறை வைத்து காவல் காத்த காலமும் இருந்தது. இன்று நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

எனவே நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதன் மூலமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை போன்ற தொழில்களை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், சிறு சிறு வியாபாரங்களை செய்வதற்கு இது போன்ற நிறைய பயிற்சிகளை, வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இது போன்ற கடன் திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது போன்று ஊரகப்பகுதிகளில், இயங்கக்கூடிய நிறுவனங்கள், வங்கிகள் அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என,அனைவரும் இந்த வறுமையினுடைய நச்சு சுழலில் இருந்து பொதுமக்களை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ,இது போன்ற நிகழ்ச்சிகள். எனவே ,இது போன்ற பல்வேறு திட்டங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு கிராமத்தில் ஒரு சமுதாயமாக இணைந்து நாம் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், செயல் இயக்குநர் (தானம் அறக்கட்டளை) ம.ப.வாசிமலை, திட்ட தலைவர்கள் பி.வெங்கடேசன், மதன்குமார், சாந்தி,கரூர் வைசியா வங்கியின் சமூக பொறுப்பு நிதி தலைவர்கள் வைத்தியநாதன், மகேஷ், ஜி.வெங்கடேசன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜா சுரேஷ்வரன், முன்னாள் நபார்டு முதன்மை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!